மதிமுகவின் நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் இன்று (07.11.2025) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் மதிமுக தொடர்வதா? வேண்டாமா? என்ற கேள்வி எழுந்தது. அப்போது, அதிமுகவின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அனுப்பி வைத்த குழுவில் இருந்த நண்பர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தம்பிதுரை, ஓ.பி.எஸ். (ஓ. பன்னீர்செல்வம்) ஆகியோர் மதிமுக தலைமை கழகத்திற்கு வந்தனர்.
அப்போது அவர்களிடம், “கடைசியாக எவ்வளவு சீட் கொடுக்க முடிவு செய்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். 12 சீட் தான் என்றார்கள். இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு உடன்பட முடியாது. இதைவிட அதிகமான சீட்டுகளை கொடுக்க உங்கள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒப்புக்கொண்டால் கூட்டணியை உறுதிப்படுத்திவிடலாம் என்றேன். எனவே நான் செல்போனை ஆன்லேயே வைத்திருக்கிறேன். மாலை 5 மணிக்கு எங்களுடைய (மதிமுக) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னால் சொல்லிவிட்டால் அப்போதே கூட்டணியை உறுதிப்படுத்தலாம் எனத் தெரிவித்தேன்.
அதற்கு அவர்கள் அதையே செய்கிறோம் என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். இதில் முக்கியமாகச் சொன்னவர் ஓ.பி.எஸ். ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிடம் சென்று ‘அவர் (வைகோ) நம் (அதிமுக) கூட்டணியில் நீடிக்க விரும்பவில்லை. அவர் சொல்வதுபோல் நம்மால் சீட் கொடுக்க முடியாது. அதனால் கூட்டணியை முறித்துவிட்டார்’ என்று பொய்யைச் சொல்லிவிட்டார். அதன் பின்னர் தான் இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் வைத்தியநாதன் மூலம் கேள்விப்பட்டேன். 15 சட்டமன்றத் தொகுதியும், ஒரு ராஜ்யசபாவும் கொடுப்பது என்று ஜெயலலிதா முடிவெடுத்துவிட்டார்.
நீங்கள் நேராகச் சென்று சந்தித்தால் இதை உறுதிப்படுத்துவார்கள் என்று சொல்லி என்னிடம் பேசுவதற்கு மூத்த பத்திரிக்கையாளர்கள் சோவும், வைத்தியநாதனும் படாதபாடு பட்டிருக்கிறார்கள். நான் செல்போனை எல்லாம் ஆஃப் செய்துவிட்டு இருக்கும் இடமே தெரியக்கூடாது என்று ஒருவரது வீட்டில் இருந்தேன். மாலைதான் தாயகத்திற்கு வந்தேன். ஓ.பி.எஸ். அழைப்பார் என்று செல்போனைக் கையிலேயே வைத்திருந்தேன். ஆனால் அவர் கூப்பிடவேயில்லை. அதன் பலனை இன்று ஓ.பி.எஸ். அனுபவித்துக் கொண்டிருக்கிறார்” என வைகோ தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/07/vaiko-our-img-2025-11-07-12-58-45.jpg)