தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்களோடு நேற்று (31.07.2025) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுமார் 3 மணிநேரமாக நீடித்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிக்கலாமா? அல்லது விலகலாமா? என்பது குறித்து இரு வேறு கருத்துக்கள் ஆதரவாளர்கள் இடையே இருந்ததாகக் கூறப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி ராமச்சந்திரன், 'தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் அதனுடைய தலைவர் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் விரைவில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார்' என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இரண்டு முறை ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்திருந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ''சட்டமன்றத்தில் சந்திக்கும் போதும் சரி, நான் ஏற்கனவே போனில் அவரிடம் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவு அவருடைய சொந்த பிரச்சனையா? அல்லது வேறு ஏதும் பிரச்சனையா என்பது எனக்கு தெரியவில்லை. ஓபிஎஸ் விரும்பினால் ஆகஸ்ட் 26ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறேன். கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிக்கை வெளியிடுவதற்கு முன்பாகவே நான் போன் பண்ணி பேசி இருந்தேன். எதும் முடிவெடுக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டேன். டி.டி.வி.தினகரனிடமும் இதுகுறித்து பேசி இருக்கிறேன்'' என தெரிவித்தார். இதனால் ஓபிஎஸ் தரப்பை பாஜக சமாதானப்படுத்த முயல்வதாக தகவல்கள் வெளியானது.

இந்தநிலையில் நயினார் நாகேந்திரன் உண்மையை மறைப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்துள்ளது. 'பிரதமரைச் சந்திப்பதற்காக பலமுறை செல்போனில் அழைத்தும் நயினார் நாகேந்திரன் அவருடைய அழைப்பை எடுக்கவில்லை' என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளது.