'He didn't change despite being warned several times' - SI caught red-handed Photograph: (pudukottai)
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகே உள்ள பணிரெண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா மகன் வீரமணி(47). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சிலருக்கும் நிலப் பிரச்சனை இருந்துள்ளது. அந்தப் பிரச்சனை சம்பந்தமாக வீரமணி ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து விசாரித்த போலீசாரிடம் சிவில் பிரச்சனை என்பதால் நீதிமன்றத்தில் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால், ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக உள்ள (கீரனூர் கிருஷ்ணபாரம்பட்டி ராசு மகன்) சங்கர் (57) வீரமணியை தொடர்பு கொண்டு உன் புகார் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கிறேன் ரூ.10 ஆயிரம் பணம் கொடு என்று கேட்டு தொந்தரவு செய்துள்ளார். உதவி ஆய்வாளர் சங்கரிடம் லஞ்சம் கொடுக்க விரும்பாத வீரமணி புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரையடுத்து புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி இன்று மாலை வீரமணி ரூ.10 ஆயிரம் பணம் கொண்டு போய் ஆதனக்கோட்டை உதவி ஆய்வாளர் சங்கரிடம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன், ஆய்வாளர் ஜவஹர் உள்பட லஞ்ச ஒழிப்பு போலீசார் எஸ்.ஐ சங்கரை கையும் களவுமாக பிடித்து லஞ்சம் வாங்கிய பணத்தை பறிமுதல் செய்து கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இந்த உதவி ஆய்வாளர் சங்கர் வேலை செய்த ஆவுடையார்கோயில், அன்னவாசல் என பல காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்க வருவோரிடம் லஞ்சம் வாங்கி குவிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் பல முறை காவல் உயர் அதிகாரிகள் எச்சரித்து இடமாறுதல் செய்துள்ளனர்.
கடைசியாக சில மாதங்களுக்கு முன்பு அன்னவாசலில் இது போல பிரச்சனைகளில் சிக்கியதால் ஆதனக்கோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறும் போலீசார், தற்போது வசமாக சிக்கிச் கொண்டார். நாளை பணியிடை நீக்கம் செய்யபடுவார். தொடர்ந்து சில ஆண்டுகளில் பணி ஓய்வு பெறுவதற்குள் குற்றமற்றவராக நீதிமன்றத்தில் நிருபித்தால் தான் பணப்பலன்களுடன் பணி ஓய்வுபெற முடியும் என்கின்றனர்.
Follow Us