தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்கள் முன்னிலையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இன்று மூன்றாவது கட்டமாக கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அக்கட்சியின் தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக நாமக்கல் செல்கிறார். காலை நாமக்கலிலும் மாலை கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியிலும் மக்கள் சந்திப்பு பயணம் நடைபெற உள்ளது. விஜய் வருகையை ஒட்டி நாமக்கல் மாவட்டத்தில் அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
விஜய் வருகையை ஒட்டி ரசிகர்கள், தொண்டர்கள் அதிகமாக குவிந்து வருவதால் உயர்ந்த கட்டிடங்கள், மின் கோபுரங்கள், மரங்கள் ஆகியவற்றில் ஏறக்கூடாது. அதேபோல பிறர் மனம் புண்படும் படி யாரும் பேசக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு அங்கு கூடியிருந்த தொண்டர்கள் பேட்டியளித்து வருகின்றனர். அதில் பேசிய பெண் ஒருவர் ''விஜய் என்றால் எனக்கு பைத்தியம். அவரை பார்த்துவிட்டால் கூட போதும். அவர் பேசக்கூட வேண்டாம். தூரத்தில் இருந்து ஒரு டைம் பார்த்துவிட்டால் போதும்'' என்றார்.
அதேபோல் தவெக தொண்டர் ஒருவர் சீமானை கடுமையாக விமர்சித்து பேசினார். ''சீமான் விக்கிரவாண்டி மாநாட்டிற்கு முன்பு நான் தான் என் தம்பியை வரச்சொன்னேன் என்று ஆதரித்து பேசினார். நாங்கள் சீமானின் ஆதரவை கேட்டோமா? உங்களை முதலில் அண்ணனாக ஏற்றுக்கொண்டோமா? உங்கள நம்பித்தான் 54 பேரை இழுத்துப் போய் மைக்கு சின்னத்தில் ஓட்டு போட வைத்தேன். விஜய் ஆதரவு தெரிவிக்கிறார் என்று ஏமாற்றி ஓட்டு வாங்கிட்டு இன்னைக்கு அணில் குஞ்சான் என்கிறார். வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார்'' என ஆவேசமாக பேசினார்.