முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இதய சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வதற்கு அனுமதி கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்த நிலையில் அசோக்குமார் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இன்று (22/07/2025) இந்த விசாரணைக்கு வந்தது. அப்போது அசோக்குமாருக்கு அனுமதி வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. அமலாக்கத்துறை தரப்பிலான வாதத்தில், '9 முறை சம்மன் அனுப்பியும் ஒருமுறை கூட அசோக்குமார் நேரில் ஆஜராகவில்லை. விசாரணைக்கும் ஒத்துழைக்கவில்லை. அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் சிகிச்சையை அவர் இந்தியாவிலே மேற்கொள்ளலாம். அவரை அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக செல்ல அனுமதிக்கக் கூடாது' என எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதிகள் 'இந்த வழக்கில் முடக்கப்பட்ட சொத்துக்கள் ஏதும் அமெரிக்காவில் இருக்கிறதா? என அமலாக்கத்துறைக்கு கேள்வி எழுப்பினர். அதற்கு அமலாக்கத்துறை சார்பில் 'இல்லை' என பதிலளிக்கப்பட்டது. அமெரிக்காவில் அசோக்குமார் சிகிச்சை பெறக்கூடிய மருத்துவமனையின் பெயர், விமான டிக்கெட், தங்கும் இடம் ஆகியவற்றை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், அசோக்குமார் தரப்பு தாக்கல் செய்யும் ஆவணங்களை உண்மையா என ஆய்வு செய்யும்படி அமலாக்கதுறைக்கு உத்தரவிட்டு வழக்கு வரும் ஜூலை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.