கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் நாமக்கல் எஸ்பி அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. மேலும், தமிழக அரசு அமைத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது.

Advertisment

இந்த சம்பவத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களான சி.டி.நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் தலைமறைவாகி விட்ட நிலையில் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் நகரப் பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று பவுன்ராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான ராஜ்மோகன் பல நாட்களாக எந்த விதமான கருத்தும் தெரிவிக்காத நிலையில் சமூக வலைத்தளங்களில் அவரை காணவில்லை என கேலிப் பதிவுகள் வெளியாகி இருந்தது.

Advertisment

தொடர்ந்து ட்ரோல் மெட்டீரியலாக ராஜ்மோகன் மாறிய நிலையில் தற்போது அவர் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் 'வேதனையிலிருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது. அதேசமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி. இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம், அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும், நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்று தருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்' என தெரிவித்துள்ளார்.