ஹரியானா மாநிலத்தில் மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், தனது மூத்த அதிகாரிகள் சாதி ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி 9 பக்கத்துக்கு கடிதம் எழுதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

ஹரியானா மாநிலத்த்தின் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான புரன் குமார், 2001ஆம் ஆண்டு பேட்ச் ஏடிஜிபி பொறுப்பு வகித்து வந்தார். இவரின் மனைவி அம்னீத் பி குமார் ஐஏஎஸ், ஹரியானா அரசின் வெளியுறவுத்துறை ஒத்துழைப்பு துறையின் ஆணையர் மற்றும் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

Advertisment

சமீபத்தில், அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான குழுவில் இடம்பெற்ற அம்னீத் பி குமார், அலுவல் பணிக்காக சமீபத்தில் ஜப்பான் நாட்டுக்குச் சென்றார். இந்த நிலையில் மனைவி இல்லாத நேரத்தில், சண்டிகரில் உள்ள தனது இல்லத்தில் ஐபிஎஸ் அதிகாரி புரன் குமார் கடந்த 7ஆம் தேதி 12 அதிகாரிகள் மீது குற்றம் சாட்டி 9 பக்கத்துக்கு கடிதம் எழுதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில், கடந்த 2020ஆம் ஆண்டு முத்த மூத்த அதிகாரிகளால் சாதி அடிப்படையிலான பாகுபாடு, பாரபட்சமான பதவிகள் மற்றும் நிர்வாக துன்புறுத்தலில் துன்புறுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த புரன் குமாரின் மனைவி அம்னீத் உடனடியாக இந்தியா திரும்பினார். இதனையடுத்து, புரன் குமாரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறையற்ற பதவி உயர்வுகள், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் நிர்வாக துன்புறுத்தல் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் புரன் குமாருக்கு நீண்ட காலமாக தகராறுகள் இருந்தாகக் கூறப்படுகிறது. இது குறித்து பல ஆண்டுகளாக அவர், முதலமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பல கடிதங்களை எழுதியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இருப்பினும் புரன் குமார் குற்றம் சாட்டிய மூத்த அதிகாரிகள் மீது போலீசார் எந்தவித வழக்கும் பதியவில்லை என்று கூறப்பட்டது. இதனையடுத்து தற்கொலைக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஹரியானா டிஜிபி சத்ருஜீத் கபூர் மற்றும் ரோஹ்தக் எஸ்எஸ்பி உள்ளிட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும், தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் எனவும் புரன் குமாரின் மனைவி அம்னீத் மாநில முதல்வரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ‘இது ஒரு சாதாரண தற்கொலை வழக்கு அல்ல, ஒரு பட்டியல் சாதி சமூகத்தைச் சேர்ந்த அதிகாரியான எனது கணவர், சக்திவாய்ந்த மற்றும் உயர் அதிகாரிகளால் திட்டமிட்டு துன்புறுத்தப்பட்டதன் நேரடி விளைவு’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இந்த வழக்கை விசாரிக்க சண்டிகர் ஐஜிபி தலைமையில் ஆறு பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அரசியல் ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டியலின அதிகாரிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக மாநில அரசை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், டிஜிபி சத்ருஜீத் கபூர் உட்பட குற்றம் சாட்டப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.