தெலங்கானா மாநிலம், சைபராபாத் ஐ.டி. மையத்தில் உள்ள, ஸ்வான் லேக் அடுக்குமாடி குடியிருப்பில் ரேணு அகர்வால் என்ற பெண் தனது கணவர் மற்றும் மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி காலை, வழக்கமாக ரேணுவின் கணவர் மற்றும் அவரது 26 வயது மகன் இருவரும் வேலைக்குச் சென்றனர். மாலை நேரத்தில், கணவரும் மகனும் மாறி மாறி ரேணுவின் செல்போனைத் தொடர்பு கொண்டனர். ஆனால், ரேணு செல்போனின் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த இருவரும் முன்கூட்டியே வீட்டிற்குத் திரும்பினர்.

Advertisment

ஆனால், வீட்டின் கதவு பூட்டியிருந்ததால், ஒரு மெக்கானிக்கின் உதவியோடு கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ரேணு, கைகால்கள் கட்டப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, சடலமாகக் கிடந்தார். உடனடியாக, சைபராபாத் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

மேலும், அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த வீட்டில் வேலை பார்த்து வந்த ஹர்ஷாவும், அதே குடியிருப்பின் 14-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்யும் ரவுஷனும், ரேணுவின் வீட்டிலிருந்து வெளியே வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனடிப்படையில், காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, ஒரு மனிதவள அமைப்பின் மூலம் ஹர்ஷா, ரேணு அகர்வாலின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். மேலும், அதே குடியிருப்பில் உள்ள மற்றொரு வீட்டில் ரவுஷன் என்ப்வர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், இருவரும் சேர்ந்து ரேணுவின் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று, ரேணு மட்டும் வீட்டில் இருந்ததால், இருவரும் சேர்ந்து ரேணுவின் கைகளையும் கால்களையும் கட்டி, வீட்டில் இருந்த பிரஷர் குக்கரால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். பின்னர், கத்தி மற்றும் கத்தரிக்கோலை கொண்டு ரேணுவின் கழுத்தை அறுத்து, கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். அதன்பிறகு, வீட்டில் சாவகாசமாகக் குளித்துவிட்டு, 40 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், குற்றவாளிகள் இருவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், கொடூரச் சம்பவத்தை நிகழ்த்திவிட்டு, இருவரும் சொந்த ஊருக்குத் திரும்பியிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

Advertisment

இதனைத் தொடர்ந்து, ஐந்து சிறப்பு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஒரு போலீஸ் டீம் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கும் விரைந்துள்ளது. இந்தச் சம்பவம் ஸ்வான் லேக் குடியிருப்பு வாசிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹைதராபாத் நகரில் வீட்டு வேலைக்காரர்களைப் பணியமர்த்துவதற்கு முன்பு, முறையான பின்னணி சரிபார்ப்பு செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது. 

கடந்த 2023-ஆம் ஆண்டு, ஹைதராபாத்தில், வீட்டு வேலை செய்து வந்த ஒருவர், வீட்டில் தனியாக இருந்த பெண்ணைக் கொலை செய்துவிட்டு, பணமும் நகைகளும் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் இதேபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.