சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத்தொடரில் இன்று கலந்துகொண்ட அதிமுகவினர், உருட்டுக் கடை அல்வா பாக்கெட்டுகளைக் கொண்டு வந்த கலகலப்பாக்கினார்கள்.
அக்டோபர் 15-ம் தேதி கரூர் துயர சம்பவத்தை அனுசரிக்கும் விதமாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இடது கையில் கருப்பு கைப்பட்டையுடன் வந்து சட்டப்பேரவையை பரபரப்பு கிளப்பினார்கள். இதையடுத்து அக்டோபர் 16-ம் தேதி, திமுக அரசின் கிட்னி முறைகேட்டினைக் கண்டிக்கும் வகையில் சட்டைப் பாக்கெட்டில் ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற வாசகத்தை பேட்ஜாக அணிந்து வந்தனர்.
இந்நிலையில் இன்று (17/10/2025) தலைமைச் செயலகத்துக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 'உருட்டு கடை அல்வா' பாக்கெட் கொண்டு வந்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ்,"திமுக ஆட்சி என்பது உருட்டுக்கடை அல்வா நினைவுக்கு வருகிறது. இந்த அரசாங்கத்தில் இப்படிப்பட்ட அல்வாதான் கிடைக்கும். கடந்த 2021ம் ஆண்டில் தீபாவளியின் போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதில் 10% அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார். இந்த உருட்டுக்கடை அல்வாவை பிரிச்சுப் பாருங்க… எப்படி டேஸ்டா இருக்குதான்னு சொல்லுங்க’" என்ற கூறியவர், அனைவருக்கும் பாக்கெட் கொடுக்கப்பட்டது. அந்த பாக்கெட்டில் எதுவும் இல்லை. திமுக எல்லோருக்கும் அல்வா கொடுத்துவிட்டது என்பதைக் காட்டும் வகையில் உருட்டுக் கடை அல்வா பாக்கெட்டை இபிஎஸ் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.