சென்னை கொளத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், ‘தாய்த் தமிழ் காத்த போராளிகள் மற்றும் கரும்புலி முத்துக்குமார் நினைவேந்தல்’ என்ற கருத்தரங்கு நேற்று முன்தினம் (29.01.2026) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கலந்து கொண்டு பேசுகையில், “எனக்கு எந்த அரசன் மீதும் மதிப்பு கிடையாது. யாரையும் (ஒருமையில் குறிப்பிட்டார்) நான் பெரிய சக்தியாக பார்ப்பது கிடையாது. அந்த மன்னர்கள் காலத்தில்தான் இந்த நாடு குட்டிச் சுவரானது. 

Advertisment

சமஸ்கிருத மயமானது. இந்துத்துவ மயமானது. தமிழ் கோவிலின் கருவறைக்குள்ளே இருந்த தமிழ் தூக்கி வெளியே வீசப்பட்டதெல்லாம் இந்த பாண்டிய மன்னர்கள் சோழ மன்னர்கள் சேர மன்னர்கள் பல்லவ மன்னர்கள் ஆண்ட காலத்தில்தான். வேள்வி நடத்தியவன் யாகம் நடத்தியவன் தமிழ் பெயர்களை மாற்றி வடமொழி பெயர்களை தங்கள் பெயருக்கு பின்னால் சூட்டிக்கொண்டவன். ராஜ ராஜன் என்பது தமிழ் பெயரா?. ராஜேந்திரன் என்பது தமிழ் பெயரா?. எல்லாம் வடமொழி பெயர்களை சூட்டிக் கொண்டவர்கள் வடமொழியிலே மயங்கி கிடந்தவர்கள். பார்ப்பனர்களின் வேள்வி யாகங்களில் மயங்கி கிடந்தவர்கள். 

Advertisment

அவர்கள் எப்பேர்பட்ட மன்னாதி மன்னர்களாக இருந்தாலும் அவர்கள் எம் தமிழ் அழிவதற்கும் எம் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் என்பதை உணர்ந்தவன் நான். எனவே எனக்கு ஆண்ட பரம்பரை என்று சொல்லுவதிலே எந்த பெருமையும் இல்லை” எனப் பேசியிருந்தார். இந்நிலையில் திருமாவளவனின் கருத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழும், தமிழ் கலாச்சாரமும் அழிய தமிழ் நில மன்னர்கள் தான் காரணமா? – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு தொல்.திருமாவளவன் அவர்களின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

ttv-dhinakaran-pm-5
கோப்புப்படம்

தமிழ் அழிவதற்கும், தமிழ் கலாச்சாரம் அழிவதற்கும் வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் வருத்தமளிக்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும், பண்பாட்டுக் கலாச்சாரத்தையும் போற்றிப் பாதுகாத்து, வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நில மன்னர்கள் குறித்த தொல். திருமாவளவனின் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

Advertisment

ராஜராஜன் தமிழ்ப் பெயரா? ராஜேந்திரன் தமிழ்ப் பெயரா? என பொதுவெளியில் கேள்வி எழுப்பும் தொல். திருமாவளவன், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்கள் தமிழ்ப்பெயரா? என கேட்கும் தைரியமும், துணிச்சலும் இருக்கிறதா? என்ற கேள்வி தமிழர்கள் அனைவரின் மத்தியிலும் இந்நேரத்தில் எழுந்திருக்கிறது. எனவே, திமுகவையும், அதன் தலைவர்களையும் திருப்திப்படுத்துவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ்நில மன்னர்கள் மீது அவதூறுகளை அள்ளிவீசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.