தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் தற்போது முதலே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம், பொதுக்கூட்டம், பரப்புரை என அடுத்தடுத்து தேர்தல் வேலைகளில் இறங்கியுள்ளன.
அந்த வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன் ஏற்கனவே தொகுதி வாரியாக தேதிகளை திட்டமிட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள எடப்பாடி பழனிசாமி இன்று காரைக்குடியில் திறந்தவெளி வேனில் நின்று பேசுகையில், ''பாஜக என்றால் உங்களுக்கு இந்துத்துவா கட்சி. ஆனால் உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிட்டால் உடனே ஓடிப் போய் பாஜக கதவை தட்டுகிறீர்கள்'' என பேசிய எடப்பாடி பழனிசாமி, அருகில் நின்று கொண்டிருந்த எச்.ராஜாவை குறிப்பிட்டு, ''அண்ணா நீங்க பாஜக-திமுக கூட்டணியில் போட்டியிட்டீர்களா இல்லையா?'' எனக் கேட்க, 'ஆம்' என ஹெச்.ராஜா தலையசைத்தார்.
''அண்ணனே சாட்சி. அப்பொழுதும் பாஜக அதே கட்சி தானே. அன்றும் அக்கட்சி பாரதிய ஜனதா என்றுதானே இருந்தது. வேறு பெயரிலா இருந்தது? ஹெச்.ராஜா இன்றும் பாரதிய ஜனதா கட்சியில் தான் இருக்கிறார். அவர்களெல்லாம் (திமுக) கூட்டணி வைத்தால் நல்லது. நாங்கள் கூட்டணி வைத்தால் மதவாத கட்சி. இது கேவலமாக இல்லையா உங்களுக்கு. இது ஒரு ஜனநாயக நாடுங்க. நீங்கள் அரசியல் செய்யுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி, தகுந்த மாதிரி அந்தந்த கட்சிகள் கூட்டணி அமைக்கும். இதில் தவறான, அவதூறான கருத்துக்களை பரப்பி அரசியல் ஆதாயம் தேட திமுக முயற்சி செய்கிறது. இது ஒருக்காலும் நடக்காது. மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். மு.க.ஸ்டாலின் அவர்களே எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள் எங்களைப் பொறுத்த வரைக்கும் எங்களுடைய கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது.
எங்கள் கூட்டணி தான் நூற்றுக்கு நூறு சதவீதம் தமிழகத்தில் வெற்றி பெறும். 2020 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். அதுமட்டுமில்லாமல் பருவமழை எல்லா இடத்திலும் பெய்திருக்கிறது. பெய்து கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்டத்திலிருந்து அனைத்து மாவட்டங்களிலும் இன்றைக்கு நடவு செய்யும் காலகட்டம். இதனால் ஆங்காங்கே விவசாயிகள் தொடக்க கூட்டுறவு வங்கியில் போய் பயிர் கடன் பெறுவார்கள். அதற்கு திமுக ஒரு தந்திரமாக சிபில் ஸ்கோர் வேண்டும் என அறிவித்துள்ளார்கள். சிபில் ஸ்கோர் க்ளியர் பண்ண நிறைய டாக்குமெண்ட் வாங்க வேண்டும். அதை எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து கிளியரன்ஸ் வாங்கி கொடுத்தால் தான் லோன் கிடைக்கும் என்ற தவறான தகவலை வெளியிட்டு விவசாய மக்களை அலைக்கழித்துள்ளார்கள்.
எல்லா விவசாயிகளும் இது தொடர்பாக என்னிடம் சொன்னார்கள். பிரதமரிடம் இது தொடர்பாக ஒரு கடிதம் கொடுத்து 'என்னங்க டெல்லி அரசாங்கம் தான் இப்படி செய்கிறது இது தவறாக பரப்பப்படுகிறது' என சொன்னேன். உடனே நேற்றைய தினமே திமுக அரசாங்கம் ஏற்கனவே என்ன முறையில் பயிர் கடன் பெற்றீர்களோ அதே முறையை பின்பற்றலாம் என்று அறிவித்துள்ளார்கள். மோடியிடம் நான் கோரிக்கை வைத்தவுடன் மாற்றியுள்ளனர்'' என்றார்.