ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பா.ஜ.கவின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கலந்து கொண்டார். பின்னர் எச். ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, “அமெரிக்கா இந்தியாவிற்கு எதிராக 50 சதவீதம் வரி விதித்த பாரபட்சமான நடவடிக்கை இன்று முதல் தொடங்குகிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான் கேட் குழுவில் இந்தியா உறுப்பினராக சேர்க்கப்பட்டது. இப்போது அமெரிக்கா விதித்துள்ள வரி காரணமாக கேட் உடன்படிக்கை தோற்று விட்டதாக எடுத்துக் கொள்ளலாம். சுதேசி உற்பத்தி பொருட்களை வாங்க வேண்டும் என்றும், ஆன்லைனில் அமெரிக்கா பொருட்களை இந்திய மக்கள் அனைவரும் வாங்க மாட்டோம் எனவும் முடிவெடுக்க வேண்டும். ஒரு பொருளாதார நடவடிக்கைக்கு அடி கொடுப்பது என்பது மற்றொரு பொருளாதார நடவடிக்கை மூலமாக மட்டுமே கொடுக்க வேண்டும்.
அமெரிக்காவின் பொருளாதார பாரபட்ச நடவடிக்கைக்கு ஒவ்வொரு இந்திய மக்களும் பதிலடி கொடுக்க வேண்டும். 2024-25-ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 825 பில்லியன் டாலர். அதில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 60 பில்லியன் டாலர் மட்டுமே. இது மொத்த ஏற்றுமதியில் 7.25 சதவீதம் மட்டுமே. மற்ற நாடுகளோடு வர்த்தகத்தை அதிகரிப்பதன் மூலமாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்துவது மூலமாக வரக்கூடிய இழப்பை சரி முடியும். மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் நோக்கோடு ஜி.எஸ்.டி வரியில் சீர்திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது அரசு செய்யும் கடமை என்றால் நாம் அரசுக்கு செய்யும் கடமை என்பது ஆன்லைனில் பொருட்களை வாங்க மாட்டோம் என முடிவெடுக்க வேண்டும். இலங்கைக்கு சொந்த பணத்தில் கப்பல் விட்டவர் தான் வ.உ.சி. அந்த கப்பலில் பணம் வாங்காமல் தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த அளவிற்கு தேச பற்று உள்ளவர்.
சிறுபான்மையினர் வாக்குகள் மட்டுமே போதும் என விஜய் முடிவு செய்துள்ளார். சிறுபான்மை வாக்கிற்காக மட்டுமே அரசியலுக்கு வந்திருப்பதாக அவர் கூறியுள்ளது, இந்துக்கள் வாக்கு வேண்டாம் என முடிவு செய்து இருப்பதையே காட்டுகிறது. தி.மு.க.வும், பா.ஜ.க.வும் மறைமுக கூட்டணி என விஜய் கூறி இருப்பதெல்லாம் வெரும் பிதற்றல். பா.ஜ.க, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளது. தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருந்தோம். 1999-ல் தி.மு.க, வாஜ்பாய் அரசாங்கத்துடன் கூட்டணி வைத்திருந்தது. முரசொலி மாறன், வாஜ்பாய் அரசில் இடம் பிடித்திருந்தார். இது ரகசிய உறவோ கள்ள உறவோ இல்லை. நல்ல உறவு தான் வைத்து இருந்தது. கல்வி கொள்கையில் தி.மு.க.வின் வழியை பின்பற்றி வரும் விஜய் முதலில் அரசியலை படியுங்கள்.
1974ல் கச்சத்தீவை இலங்கைக்கு தானம் செய்தது காங்கிரஸ் அரசு. தி.மு.க அரசு மவுனமாக ஆதரித்தது. இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் வாஜ்பாய் பேசினார். தமிழகத்தில் ஜனசங்க தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்தார். இதை முதலில் படிக்காமல் கள்ள உறவு குறித்து பேசுகிறார். கச்சத்தீவை தாரை வார்க்கும் முன் காங்கிரஸ் சிந்தித்து இருக்க வேண்டும். ஆதரித்த காங்கிரசிற்கும் தி.மு.க.விற்கும் கள்ள உறவு உள்ளதா? என எனக்கு விஜய் பதில் சொல்லட்டும். காங்கிரசை ஏன் விஜய் கண்டிக்கவில்லை? கொஞ்சமாவது விஷயங்களை படித்து தெரிந்து கொண்டு பேசுங்கள்” என்று கூறினார்.