மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக இன்று (21.12.2025) மாலை கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதன் பிறகு சந்தனக் கூடு விழா நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் தான் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான  பிரச்சனையின் காரணமாக மலை அடிவாரத்தில் வழக்கம் போல மலையைச் சுற்றி பேரிகாடு அமைக்கப்பட்டது. அதோடு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. அதே சமயம் ஏற்கனவே நடைபெற்ற அமைதி கூட்டத்தின் முடிவின்படி சந்தனக் கூடு திருவிழாவிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும், கொடியேற்றுவதற்கும் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

Advertisment

இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது, “எங்களை கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. இந்த சூழ்நிலையில் எவ்வாறு சந்தனக் கூடு நடத்த மேலே செல்பவர்களை அனுமதிக்கலாம்” என்று  போலீசாருடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களைத் திருப்பரங்குன்றம் அருகே உள்ள  மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அங்கு வந்த பா.ஜ.க. மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களைப் பார்க்கத் திருமண மண்டபத்திற்குச் சென்றனர். அவர்களைச் சந்திக்க போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் பா.ஜ.க. மற்றும் பல்வேறு அமைப்புகளைச்  சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Advertisment

அதோடு பாஜகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகியான எச். ராஜா அங்கு வருகை தந்தார். அவர் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம், “திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டவர்களைப் பார்க்க ஏன் அனுமதிக்கவில்லை?. அவர்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டும்” என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பூர்ணசந்திரன் தற்கொலைக்குத் தீபம் ஏற்றாதது தான் காரணம் ஆகும் என்று கூறி வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.  இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. இதன் காரணமாகத்  திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி அனைத்து பகுதிகளிலும் பேரிகாடு அமைக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.