H Jawahirullah condolences over the loss of lives in the Tenkasi bus accident
தென்காசி மாவட்டத்தில் இரண்டு வாகனங்கள் எதிரும் புதிருமாக மிக வேகமாக வந்த போது நேருக்கு நேர் மோதி கோர விபத்தானது. இந்த விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தென்காசி பேருந்து விபத்தில் உயிரிழந்தோருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்- கொல்லம் தேசியநெடுஞ்சாலையில் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தக் கோர விபத்து குறித்து அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் மிக விரைவாகக் குணம் பெற்று இல்லம் திரும்பப் பிரார்த்திக்கிறேன். விபத்தில் பலியானவர்களுக்கும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் தமிழ்நாடு அரசு நிதி உதவி வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. விபத்து செய்தி அறிந்தவுடன் உடனடியாகக் களத்தில் எமது துணைப் பொதுச்செயலாளர் மைதீன் சேட் கான் தலைமையில் தென்காசி மாவட்டத் தலைவர் நயினார் முகம்மது தென்காசி நகரத் தலைவர் அபாபில் மைதீன் உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் களத்திற்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.எமது தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி,செங்கோட்டை, சம்பவர்வடகரை அவசர ஊர்திகள் மூலம் படுகாயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அதிவேகமாகப் பேருந்துகளை இயக்கியதே இது போன்ற விபத்துக்குக் காரணம். இதுபோன்று தமிழ்நாட்டில் வேறு எங்கும் நடக்காத வண்ணம் ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் சரியான அறிவுறுத்தல்களைப் போக்குவரத்துத் துறை சார்பில் வழங்கவேண்டும். அந்த வழிகாட்டுதல்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow Us