அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், எச்-1பி விசா திட்டத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில், விசா விண்ணப்பங்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் (தோராயமாக 84 லட்சம் இந்திய ரூபாய்) கட்டணம் விதிக்கும் உத்தரவில் வியாழனன்று (செப்டம்பர் 19) கையெழுத்திட்டுள்ளார்.
எச்-1பி விசா என்பது, அமெரிக்க நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பம் (IT), பொறியியல், அறிவியல், நிதி உள்ளிட்ட துறைகளில் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை 3 முதல் 6 ஆண்டுகள் வரை பணியமர்த்த அனுமதிக்கும் தற்காலிக விசா திட்டமாகும். ஆண்டுதோறும் 85,000 விசாக்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன, இதற்கு லாட்டரி முறையில் தேர்வு நடைபெறுகிறது. இந்த விசாக்கள் முக்கியமாக அமெரிக்காவின் முன்னணி டெக் நிறுவனங்களால் பயன்படுத்தப்படுகின்றன.
2020 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், வழங்கப்பட்ட எச்-1பி விசாக்களில் 71 சதவீதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவைத் தொடர்ந்து, சீனர்கள் 11.7 சதவீதம் மட்டுமே பெற்றுள்ளனர். 2025-ன் முதல் அரை ஆண்டில், அமேசான் 12,000-க்கும் மேற்பட்ட எச்-1பி விசாக்களையும், மைக்ரோசாஃப்ட் மற்றும் மெட்டா நிறுவனங்கள் தலா 5,000-க்கும் மேற்பட்ட விசாக்களையும் பெற்றுள்ளன. இந்திய IT ஊழியர்கள் இந்தத் திட்டத்தின் முக்கிய பயனாளிகளாக உள்ளனர்.
இதுகுறித்து பேசிய வெள்ளை மாளிகை ஊழியர் செயலாளர் வில் ஷார்ஃப், “எச்-1பி விசா திட்டம் தற்போது மிகவும் தவறாகப் பயன்படுத்தப்படும் விசாக்களில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கர்களால் செய்ய முடியாத பணிகளை செய்யக்கூடிய வெளிநாட்டினரை பணியமர்த்துவதற்காக மட்டுமே இந்த விசா பயன்படுத்தப்பட வேண்டும்” என்று கூறினார். மேலும், ட்ரம்ப் இந்த உத்தரவு அரசுக்கு 100 பில்லியன் டாலருக்கு மேல் வருவாய் ஈட்டும் என்று தெரிவித்தார்.