திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள ஆரம்பாக்கம் பகுதியில் கடந்த 12ஆம் தேதி (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி வீட்டுக்குச் சாலையில் நடந்து சென்றபோது பின் தொடர்ந்து வந்த ஒருவர் சிறுமியைத் தூக்கிச்சென்று அருகில் உள்ள தோப்பில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிறுமி நடந்து சென்ற பகுதிக்கு அருகே உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்த போது இளைஞர் ஒருவர் சிறுமியைப் பின்தொடர்ந்து செல்வதும், திடீரென யாரும் இல்லாத நேரத்தில் அவர் அங்கிருந்து சிறுமியைத் தூக்கிச் சென்றது தொடர்பான காட்சி வெளியாகியது. இந்த காட்சியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 10 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளியை தனிப்படை போலீசார் பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். 

குற்றவாளி பற்றி தகவல் தெரிவித்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடைபெற்ற இடம் ஆந்திர மாநில எல்லை என்பதால், சம்பந்தப்பட்ட குற்றவாளி ஆந்திர மாநிலத்திற்கு ரயில் வழியாகத் தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம் குற்றவாளியின் உடல் மற்றும் தோற்றத்துடன் ஒத்துப்போகக்கூடிய 10 பேரை இதுவரை விசாரித்துள்ளனர். மேலும் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள ஆரப்பாக்கம் காவல் நிலையத்தில் இருந்து சற்று தொலைவில் ஆந்திர மாநில எல்லை ஆரம்பிப்பதன் காரணமாக ஆந்திர மாநில காவல் துறையினரிடமும், தமிழக காவல்துறையினர் உதவி கோரியுள்ளனர். 

இந்நிலையில் இந்த சம்பவத்தில் காயமடைந்த சிறுமி மருத்துவச் சிகிச்சைக்கு பின் கடந்த 19/07/2025 அன்று சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் சிறுமி முழுமையாக குணமாவதற்கு முன்பே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக சிறுமியின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்  மீண்டும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.