குஜராத் மாநிலத்தில் மிக நீண்ட காலமாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், அம்மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற  சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பேசிய பாஜகவைச் சேர்ந்த துணை முதலமைச்சர் ஹர்ஷ் சங்கவி, திருமண பதிவு முறையைக் கடுமையாக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர இருப்பதாகத் தெரிவித்தார். அந்த வகையில், இனிவரும் காலங்களில் பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய முடியாது என்ற சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவை ஆளும் பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது.  

Advertisment

அதன்படி, அரசு பதிவு அலுவலகங்களில் திருமணத்தைப் பதிவு செய்வதற்குப் பெற்றோரின் சம்மதம் கட்டாயமாக்கப்படும் என்றும், திருமண பதிவிற்கு விண்ணப்பித்தால் வாட்ஸ் ஆப் மூலம் பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்பவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட பதிவு அலுவலகங்களில் மட்டுமே திருமணங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட உள்ளது.

Advertisment

அரசின் இந்த சட்டத் திருத்தங்கள் குறித்து பொது மக்கள் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை இணையதளத்தின் வாயிலாகத் தெரிவிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஆம் ஆத்மி கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், இந்த மசோதாவிற்குக் காங்கிரஸ் கட்சி எந்த வித கருத்துகளையும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகிறது. அதே சமயத்தில், காதல் திருமணங்களைத் தடுக்கவே இந்த சட்டம் கொண்டு வரவுள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.