குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில அமைச்சரவையில் 16 பேர் அமைச்சர்களாகப் பதவி வகித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று (16-10-25) மாலை அனைத்து அமைச்சர்களும் திடீரென்று ராஜினாமா செய்தனர். இந்த சம்பவம், குஜராத் மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைத் தொடர்ந்து முதல்வர் பூபேந்திர படேலை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். அதனை தொடர்ந்து, ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்தை சந்தித்து அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை பூபேந்திர படேல் சமர்பித்தார்.
16 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் அமைச்சரவை, 26 அமைச்சர்களாக விரிவுப்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், முதல்வர் பூபேந்திர படேலின் அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டு 25 உறுப்பினர்களாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, புதிதாக நியமிக்கப்பட்ட 25 அமைச்சர்களும் இன்று (17-10-25) மாநில அமைச்சர்களாக பதவியேற்றனர். அதில் 6 அமைச்சர்கள் நீக்கப்பட்டு, கிரிக்கெட் வீரர் ரவீந்த்ர ஜடேஜாவின் மனைவியும், பா.ஜ.க எம்.எல்.ஏவுமான ரிவாபா ஜடேஜா உள்பட 19 புதிய முகங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்ட 25 அமைச்சர்களுக்கு, ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.