ஜி.எஸ்.டி. வரி விகிதங்கள் 5% மற்றும் 18% என்ற 2 அடுக்குகளாக குறைக்கப்பட்டு இன்று (22.09.2025) முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “எனதருமை நாட்டு மக்களே, வணக்கம். நவராத்திரி பண்டிகையின் முதல் நாளை நாட்டு மக்கள் கொண்டாடி வரும் வேளையில், உங்களுக்கும். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புனித பண்டிகை அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை அளிக்கட்டும். இந்த ஆண்டு, பண்டிகைக் காலம் மற்றொரு கொண்டாட்டத்தையும் சேர்த்திருக்கிறது. செப்டம்பர் 22 முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்துள்ளன. 'ஜிஎஸ்டி சிக்கனப் பெருவிழா அல்லது ஜிஎஸ்டி சேமிப்பு பண்டிகை', நாடு முழுவதும் தொடங்கி இருக்கிறது.

Advertisment

விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், நடுத்தர வகுப்பினர், வணிகர்கள் அல்லது குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் இந்த சீர்திருத்தங்கள் நேரடி பலன்களை அளிப்பதுடன், சேமிப்பையும் அதிகரிக்கும். இந்த சீர்திருத்தங்கள் கூடுதல் வளர்ச்சி மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதுடன், ஒவ்வொரு மாநிலம் மற்றும் பகுதியின் முன்னேற்றத்தையும் துரிதப்படுத்தும். 5% மற்றும் 18% ஆகிய இரண்டு அடுக்குகள் மட்டுமே பிரதானமாக இருக்கும் என்பது அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களின் மிக முக்கிய அம்சமாகும். உணவு, மருந்து, சோப்பு, பற்பசை, காப்பீடு உள்ளிட்ட ஏராளமான பொருட்களுக்கு இனி வரி விலக்கு அளிக்கப்படும் அல்லது குறைந்த அளவான 5% அடுக்கில் அவை கொண்டு வரப்படும். முன்னர் 12% வரி விதிக்கப்பட்டு வந்த பொருட்கள் அனைத்தும் தற்போது 5% க்கு மாற்றப்பட்டுள்ளது.

சீர்திருத்தங்களுக்கு முந்தைய மற்றும் பிந்தைய விலை ஒப்பீடுகளைத் தெளிவாக உணர்த்தும் அறிவிப்புகளை ஏராளமான விற்பனையாளர்களும் வணிகர்களும் காட்சிப்படுத்துவதைக் காண்பது மனநிறைவை அளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டு, லட்சியமிக்க புதிய நடுத்தரப் பிரிவை உருவாக்கி இருக்கிறார்கள். ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதை உறுதி செய்து, நமது நடுத்தரப் பிரிவினருக்கும் நாங்கள் வலிமை சேர்த்துள்ளோம். வருமான வரி விலக்கு மற்றும் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இரண்டையும் சேர்த்தால் மக்களுக்கு சுமார் 2.5 லட்சம் கோடி வரை சேமிப்பு கிடைக்கும்.

உங்கள் வீட்டு செலவுகள் குறைவதால், வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது, உபகரணங்கள் வாங்குவது. வெளியே சென்று உணவு அருந்துவது அல்லது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவது போன்ற விருப்பங்கள் சுலபமாக பூர்த்தியாகும். நம் நாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கிய ஜிஎஸ்டி பயணம், பல்வேறு வரிகளின் சிக்கல்களில் இருந்து நமது குடிமக்களையும், வர்த்தகங்களையும் பாதுகாப்பதற்கான திருப்புமுனையாக அமைந்தது. ஜிஎஸ்டி, நாட்டை பொருளாதார ரீதியாக ஒருங்கிணைத்தது. 'ஒரு தேசம், ஒரு வரி' என்பது சீரான தன்மையையும் நிவாரணத்தையும் வழங்கியது. மத்திய, மாநில அரசுகளின் ஆக்கபூர்வமான பங்களிப்புடன் ஜிஎஸ்டி கவுன்சில் மக்களுக்கு உகந்த ஏராளமான முடிவுகளை எடுத்தது. தற்போது இந்த புதிய சீர்திருத்தங்கள் அமைப்புமுறையை மேலும் எளிதாக்கி, விலைகளைக் குறைத்து, மக்களின் கூடுதல் சேமிப்புக்கு வழிவகை செய்து, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கிறது.

Advertisment

நமது சிறு தொழில் நிறுவனங்கள், விற்பனையாளர்கள், வணிகர்கள், தொழில்முனைவோர் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் ஈடுபடுவோர். எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வது, எளிதான இணக்கம் முதலியவை மேலும் மேம்படுவதைக் காண்பார்கள். குறைந்த வரிகள், குறைவான விலை மற்றும் எளிதான விதிகள் முதலியவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் மேம்பட்ட விற்பனை, குறைந்த இணக்கச்சுமை மற்றும் அபரிமிதமான வாய்ப்புகளுக்கு வித்திடும். 2047ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவது தான் நமது கூட்டு இலக்கு. இதை அடைவதற்கு தன்னிறைவின் பாதையில் பயணிப்பது இன்றியமையாததாகிறது. நமது உள்நாட்டு உற்பத்தியை வலிமைப்படுத்தி, தற்சார்பு இந்தியாவை நோக்கி முன்னேற இந்த சீர்திருத்தங்கள் ஆற்றல் அளிக்கும்.

இந்த பண்டிகைக் காலத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு ஆதரவளிக்க நாம் உறுதியேற்போம். அதாவது, ஒரு பொருளின் பிராண்டு அல்லது அதை தயாரிக்கும் நிறுவனத்தைப் பொருட்படுத்தாது. இந்தியரின் வியர்வை மற்றும் கடின உழைப்பில் உருவாக்கப்பட்ட சுதேசி பொருட்களையே வாங்குவோம்.நமது கைவினைக் கலைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் உருவாக்கும் பொருட்களை ஒவ்வொரு முறை நீங்கள் வாங்கும் பொழுதும், ஏராளமான குடும்பங்கள் வருமானம் பெறுவதற்கும். நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாவதற்கும் நீங்கள் உதவுகிறீர்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யுமாறு நமது விற்பனையாளர்களையும். வணிகர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் வாங்கும் பொருள் சுதேசி தயாரிப்பு என்பதை நாம் பெருமிதத்துடன் கூறுவோம். நாம் விற்பனை செய்பவை. சுதேசி தயாரிப்பு என்பதை நாம் பெருமிதத்துடன் கூறுவோம். தொழில்துறை, உற்பத்தியை ஊக்குவித்து. முதலீட்டு சூழலியலை மேம்படுத்துமாறு மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். மீண்டும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான நவராத்திரி, 'ஜிஎஸ்டி சேமிப்பு பண்டிகை' மூலமாக மகிழ்ச்சி மற்றும் சேமிப்புகள் நிறைந்த பண்டிகைக் கால நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீர்திருத்தங்கள். இந்தியாவின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மேம்பட்ட செழிப்பை கொண்டு வரட்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Advertisment