சென்னை அண்ணா நகரில் ஜி.எஸ்.டி. ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (07.12.2025) காலை 10 மணியளவில் யாரும் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அலுவலகத்தின் பிற பகுதியிலும் பரவியது. இதன் காரணமாக ஜன்னல் வழியாக கரும்புகைகள் வெளியேறின. இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. அதே சமயம் அப்பகுதியில் இருந்தவர்கள் இது குறித்துத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 6 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதே சமயம் இன்று ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பதால் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் யாரும் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அலுவலகத்தின் தரைத்தளத்தில் உள்ள கேண்டினில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து தகவல் வெளியாகியுள்ளது. மற்றொருபுறம் இந்த தீவிபத்தானது மின்கசிவு காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு காரணமா? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியிலும், ஜி.எஸ்.டி. ஆணையரக அலுவலர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
Follow Us