உலகம் முழுவதும் இன்று (01-01-26) புத்தாண்டு தினம் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று நள்ளிரவு 12 மணியை எட்டியதில் இருந்து புத்தாண்டை உலகின் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தையொட்டி, பட்டாசு வெடித்து வாண வேடிக்கைகளுடன் கொண்டாடி ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அதோடு கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர்.
இந்த தினத்தை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘அனைவருக்கும் 2026 புத்தாண்டு தின வாழ்த்துகள். மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம், தமிழ்நாட்டு மக்களான நாம் அனைவரும் வெற்றி பெறுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அதிமுக ஆட்சிக் காலங்களில், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு முத்தான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதோடு, மக்கள் எவ்வித அச்சமுமின்றி நிம்மதியுடன் வாழ்ந்து வந்ததை இந்த நேரத்தில் பெருமிதத்தோடு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
மலர்கின்ற இப்புத்தாண்டில் தமிழக மக்களுக்கு நிறைவான சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும், நிறைந்த செல்வத்தையும், நீடித்த ஆயுளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வழங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, தமிழக மக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அதே போல் தவெக தலைவர் விஜய், புத்தாண்டு தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக அரசியலின் நேர்மைமிகு நம்பிக்கை ஒளியாய், நாளைய தலைமுறைகளின் தலைசிறந்த வழியாய் நாமே மாறுவோம். புதிதாகப் பிறக்கும் இந்த 2026ஆம் ஆண்டு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம். வாகை சூடும் வரலாறு திரும்பப் போகிறது. வளமான, நலமான, பலமான தமிழகம் ஒளிரப் போகிறது. மக்களுடன் மக்களாக இணைந்து அதை நம் தமிழக வெற்றிக் கழகம்தான் நிகழ்த்திக் காட்டப் போகிறது. வெற்றிச் சரித்திரம் படைக்கப் போகும் அந்த உறுதியை மனதிலும் செயலிலும் ஏற்று இப்புத்தாண்டை வரவேற்போம். அனைவருக்கும் ஒளிமிக்க ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/01/political-2026-01-01-09-15-33.jpg)