ஓசூரில் பட்டதாரி இளைஞர் ஒருவர் நாய் கடிக்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

ஓசூர் மாவட்டம் தின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் பிரியன். எம்.பி.ஏ பட்டதாரியான இவர் சில தினங்களுக்கு முன்பு நாய் கடிக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகிறது. நாய் கடித்த தினத்தன்று ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு எட்வின் சென்றுள்ளார். அங்கு முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

அப்பொழுது தனியார் மருத்துவமனை நிர்வாகம் நாய் கடி என்பதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும்படி அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி தளியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எட்வின் பிரியன் சென்றுள்ளார். தொடர்ந்து அங்கு அவர் ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரியன் கொண்டு செல்லப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் நேற்று நள்ளிரவில் அலறியடித்தபடி இருந்துள்ளார். சிறிது நேரத்திலேயே உறக்க நிலைக்குச் சென்ற எட்வின் பிரியன், திடீரென சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது அங்கு பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.