மனைவி ஆசைப்பட்ட ஆடம்பர வாழ்க்கையை நிறைவேற்ற முடியாததால் பிபிஏ பட்டம் பெற்ற நபர் ஒருவர், திருமணமான சில நாட்களிலேயே திருடனாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூர் மாவட்டத்டில் உள்ள டிரான்ஸ்போர் நகரில் பட்டப்பகலில் ஒரு வயதான பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை திருடன் ஒருவர் பறித்துச் சென்றதாகப் போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதது. அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த விசாரணையில் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகின.

ஜாம்வரம்கர் கிராமத்தைச் சேர்ந்த தருண் பரீக் என்பவர் பிபிஏ பட்டம் படித்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான சில நாட்களிலேயே அதிகளவில் பணம் வேண்டும் எனவும் ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என அவரது மனைவி தருணை வற்புறுத்தியுள்ளார். இந்த அழுத்தத்திற்கு ஆளான தருண் தான் செய்து வந்த வேலையை விட்டுவிட்டு, தனது மனைவியின் கோரிக்கையை நிறைவேற்ற திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன்படி வயதான பெண்ணிடமிருந்து தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற போது தான் போலீசார் அவர் பிடிபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தருண் எத்தனைக் குற்றங்களைச் செய்துள்ளார்? அவருக்கு யாராவது கூட்டாளிகள் இருக்கிறார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது குற்றச் செயல்கள் அவரது மனைவிக்குத் தெரியுமா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்திலேயே திருடனாக மாறி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.