தாட்கோ மூலம் தூய்மை பணியாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி கலந்துகொண்டு, 165 தூய்மை பணியாளர்களுக்கு சுமார் ஒன்பது லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தூய்மை பணியாளர்கள், கூலி உயர்வு, பணியின்போது வழங்க வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதற்கு பதில் அளித்து பேசிய ஆறுச்சாமி, தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படுவதற்கு தமிழக அரசு பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் தூய்மை பணியாளர்கள் மலக்குழியில் இறங்கி பணியாற்றுவதைத் தடுக்கும் வகையிலும், மலக்குழி மரணங்களைத் தடுக்கவும், தமிழக அரசு ரோபோடிக் இயந்திரங்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக பல மாவட்டங்களில் ரோபோடிக் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் வேலூரிலும் ரோபோடிக் இயந்திரங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பற்றாக்குறை மற்றும் சம்பளம் சரியாக வழங்கப்படவில்லை என்று தூய்மை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், அரசாணை 62-பி-யை அமல்படுத்தினால், தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 600 ரூபாய் சம்பளம் கிடைக்கும் நிலை உருவாகும். முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் இது குறித்து தெரிவித்து, அரசாணை 62-பி-யை அமல்படுத்த முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.தூய்மை பணியாளர்களுக்கு பணியின் போது பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படாத இடங்கள் தெரியவந்தால், அந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தூய்மை பணியாளர்கள் நல வாரியத்திற்கு 2021 ஆம் ஆண்டு முதல் தமிழக நிதிநிலை அறிக்கையில் 10 கோடி ரூபாயும், சென்னை மாநகராட்சி நிதியிலிருந்து 5 கோடி ரூபாயும், ஆக மொத்தம் 15 கோடி ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இதுவரை 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, அதில் 5 கோடி ரூபாய் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 கோடி ரூபாய் நல வாரியத்தில் இருப்பில் உள்ளது. இந்த நிதியை வேறு எந்த காரணத்திற்காகவும் பயன்படுத்தக்கூடாது என்றும், தூய்மை பணியாளர்களுக்கே நலத் திட்ட உதவிகளை வழங்க வேண்டுமென முதலமைச்சர் தெரிவித்ததாகக் கூறினார்.

தூய்மை பணியாளர்கள் விபத்து ஏற்பட்டால், அவர்களுக்கு தூய்மை பணியாளர் நல வாரியம் மூலம் 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பல்வேறு மாவட்டங்களில் இதுபோல வழங்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், 5 லட்சம் போதாது, 8 லட்சம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இயற்கை மரணத்திற்கு 50,000 ரூபாய் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும். தூய்மை பணியாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு உரிமம் தேவைப்படும் பட்சத்தில், அதனை வழங்கவும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்” என்று அவர் தெரிவித்தார்.