தமிழக அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள் மற்றும் திட்டங்கள் போன்றவை உரிய முறையில் செய்தி ஊடகங்கள் மூலமாகச் சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும் பிற அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் அரசு செய்தி தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதாவது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஜி. ராதாகிருஷ்ணன், ககன்தீப்சிங் பேடி, தீரஜ் குமார் மற்றும் அமுதா ஆகிய 4  பேரை அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமித்துக் கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தான் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை சேர்ந்த வழக்கறிஞர் சத்திய குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “முறையான அரசாணை பிறப்பித்து அரசிதழில் வெளியிடாமல் உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் 4 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களை நியமித்தது சட்டப்படி செல்லுபடி ஆகக்கூடியது அல்ல. இதற்கு எந்த சட்ட பலமும், பின்னணியும் இல்லை. செய்தி தொடர்பாளர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டதற்குப் பத்திரிகை செய்திக் குறிப்பு மூலம் தெரிவித்தது நிர்வாக ரீதியான அத்துமீறல் ஆகும். 

அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆளுங்கட்சிக்குச் சாதகமான தகவலை வெளியிடும் அபாயம் உள்ளது. இது அரசியல் சாசன கொள்கைகளுக்கு விரோதமானது என்பதால் 4  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரசு செய்தி தொடர்பாளர் நியமித்து வெளியிட்ட பத்திரிகை செய்திக்குறிப்பை அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீ வஸ்தவா, நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (07.08.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “அரசியல் சாசனம் இயற்றப்பட்ட பிறகு முதல் முறையாகத் தமிழகத்தில் 4 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரசு செய்தி தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது சட்ட விரோதம்” ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், “ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்குச் செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்படவில்லை. அலுவல் ரீதியாக மட்டுமே அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை செய்தி தொடர்பாளர்களாக நியமிப்பதற்குத் தடை விதிக்கும் வகையில் எந்த ஒரு சட்ட விதிகளும் இல்லை” என்று தெரிவித்து இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தனர். அதோடு, தேவையில்லாமல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் நோக்கில் இந்த வழக்கைத் தொடர்ந்த மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.