மதுரை மாவட்டம் செக்காணூரணியில் செயல்பட்டு வரும் ஐடிஐ பயிற்சி மையத்தின் விடுதியில் மாணவரை நிர்வாணப்படுத்தி ராக்கிங் செய்யப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதோடு இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகளும் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மதுரை செக்கானூரணி பகுதியில் உள்ள அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் இடையே தாக்குதல் ஏற்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இந்த மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று செய்திகள் வருகின்றன. அரசு விடுதியில் ஒரு மாணவனை நிர்வாணப்படுத்தி, செருப்பால் அடித்து தாக்கப்படுவதை முதல்வரால் நியாயப்படுத்திவிட (Justify) முடியுமா?. ‘சமூகநீதி விடுதிகள்’ என்று பெயர் வைப்பதால் வருவது அல்ல. அந்த விடுதிகளின் நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும் சமூகநீதி என்பது இருக்க வேண்டும். இதனை முதல்வரும், அவர் தலைமையிலான அரசும் எப்போது தான் உணரப் போகிறது?.
அரசு விடுதியில் உள்ள மாணவர்களுக்கு இடையே கூட இணக்கமான சூழலை அமைத்திட முடியாத அரசாக இன்றைய திமுக அரசு இருப்பது வெட்கக்கேடானது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், “அரசு விடுதிகள் தான் இப்படி என்றால், இந்த ஆட்சியில் அரசுப்பள்ளிகளுமே பாதுகாப்பற்ற நிலையில் தான் இருக்கின்றன. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் ஓராண்டுக்கு முன் புதிதாக கட்டப்பட்ட அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததாக செய்திகள் வந்தன. மாணவர்கள் உள்ளே இருந்திருந்தால் அவர்கள் உயிருக்கே ஆபத்தாகி இருக்காதா?. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் நடந்த இந்த அவலத்திற்கு என்ன பதில் வைத்துள்ளது இந்த அரசு?. திமுக அரசின் கலெக்ஷன் - கமிஷன் - கரப்ஷன் கொள்ளைக்கு, மாணவர்கள் உயிரை பணயம் வைப்பது கண்டனத்திற்குரியது.
கல்வி ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும். ஒழுக்கம், சமத்துவத்தை நிலைநாட்ட வழிவகுக்கும். இந்த ஆட்சி, கல்வி மற்றும் அதற்கான கட்டுமான வசதிகள் உள்ளிட்ட அடிப்படையான விஷயங்களை நெறிப்படுத்த முடியாததால் தான் இத்தகைய பிரச்சனைகள் வருகின்றன. நடந்து செல்வதை ரீல்ஸ் (Reels) போடுவதில் இருக்கும் முனைப்பை, மாணவர்களுக்கு சுய ஒழுக்கத்தைப் பேணும் கல்வியை வழங்குவதை உறுதி செய்வதிலும், அரசுப்பள்ளிகளைத் தரமாகக் கட்டமைப்பதிலும், அரசு மாணவர் விடுதியில் ஆசிரியர் நியமனம் மேற்கொண்டு முறையாக நிர்வகிப்பதிலும் காட்ட வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.