Advertisment

“வாசிப்பு அனுபவம் புத்தகம் எழுத வைத்தது” - அரசுப்பள்ளி ஆசிரியர்!

pdu-book

ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் க.வளர்மதி. இவர் தன்னம்பிக்கை, ஆசிரியர் பணி அனுபவம், வரலாறு, தொல்லியல், கவிதைகள், இயற்கை, சுற்றுச்சூழல், வாழ்வியல் போன்ற தலைப்புகளில் 25 கட்டுரைகளைக் கொண்ட ‘கதம்பத்தேன் வரலாறும் வாழ்வியலும்’ என்ற தலைப்பில் ஒரு நூல் எழுதியுள்ளார். இந்நூலை, விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணரில் வைத்து நிதி, சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட, தமிழ்நாடு தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குநரும், பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலருமான சொ.சாந்தலிங்கம் பெற்றுக் கொண்டார். 

Advertisment

பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரும் படித்துப் பயன்பெறும் வகையில் புத்தகம் எழுதிய ஆசிரியர் வளர்மதிக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார், கல்வெட்டு ஆய்வாளர் உதயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். புத்தகம் எழுதிய அனுபவம் பற்றி அரசுப்பள்ளி ஆசிரியர் க.வளர்மதி கூறியதாவது, “ஒரு எழுத்தாளனின் வாழ்வில் முதல் புத்தகம் என்பது ஒரு மைல்கல். அது வெறும் காகிதங்களின் தொகுப்பு மட்டுமல்ல. பல ஆண்டு கனவுகளின் உருவம். அதற்கு நீரூற்றிய நிகழ்வு, ஆறாம் வகுப்பு ஆண்டுத்தேர்வு விடுமுறையில் நடந்தது. 

Advertisment

அந்த கோடை விடுமுறையில், குழந்தைகள் புத்தக வாசிப்பை மேற்கொள்வதற்காக, சித்தார்கோட்டை வாலிப முஸ்லிம் தமிழ்க் கழகம், எங்கள் வீட்டுத்திண்ணையில் அமைத்திருந்த சிறிய நூலகம், என் வாசிப்பு உலகை மாற்றியது. ஆசிரியர் பணியில் சேர்ந்த பிறகு மாணவர்களுக்குக் கல்வியை எளிமையாகவும், சுவாரசியமாகவும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இருந்தது. குறிப்பாக மனச்சோர்வுடன் இருக்கும் மாணவர்களுக்கு, தன்னம்பிக்கையை ஊட்டும் கதைகள் சொல்வதை, வழக்கமாகக் கொண்டிருந்தேன். நேர்மறை எண்ணங்கள் ஒரு மனிதனை எவ்வாறு நேர்மையுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழவைக்கும் என்பதை பல்வேறு உதாரண கதைகள் மூலம் அவர்களுக்கு உணர்த்தினேன். வழிபாட்டுக்குக் கோயிலுக்குச் சென்றபோது என்னைக் கவர்ந்த கட்டட அமைப்புகள், சிற்பங்கள் கட்டுரைகளாயின.

பள்ளிப் பணி, வீட்டுப் பணி முடித்தபின், இரவு நேரங்களில்  சிறு சிறு ஆக்கங்களை எழுதினேன். வாசிப்பு எனக்கு அளித்த ஆழ்ந்த அனுபவங்களை, வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்களை, மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் எண்ணங்களை, ஒரு சேரத் தொகுத்து அதை ஒரு நூலாகக் கொண்டு வந்துள்ளேன். இது வெறும் புத்தகம் அல்ல. என் வாழ்வின் கனவு. இப்புத்தகம் பலரது வாழ்க்கையில் ஒரு சிறிய வெளிச்சத்தையாவது ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடன் எழுதப்பட்ட ஒரு படைப்பு. நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சியும் கூட” இவ்வாறு அவர் கூறினார். 

book govt school ramanathauram SCHOOL TEACHER Thangam Thennarasu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe