ராணிப்பேட்டை மாவட்டம் கலவை நல்லூர் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 35). இவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று (30.08.2025) இரவு பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் ராணிப்பேட்டையில் இருந்து கலவையில் உள்ள தனது வீட்டிற்கு செல்லும்போது நாகலேரி அருகே ஆற்காடு நோக்கி சென்ற நெல் கதிர் அறுக்கும் இயந்திரம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் முகம் சிதைந்த நிலையில் உதயகுமார் வேலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று இரவு 9 மணிக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

இந்நிலையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உதயக்குமாரின் உறவினர் பெண் ஒருவர் வார்டின் உள்ளே இருந்து வெளியிட்டுள்ள வீடியோவில், மருத்துவமனைக்கு இரவு 9 மணிக்கு வந்ததாகவும் நள்ளிரவு ஒரு மணி வரை முறையான சிகிச்சை அளிக்கவில்லை. அவசர சிகிச்சை பிரிவில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை. மேலும் தூய்மை இல்லாததால் ஈக்கள் நோயாளிகள் மீது இருந்ததாகவும், இதுகுறித்து மருத்துவமனையை அணுகிய போது முறையான பதில் அளிக்கவில்லை. மூன்று மணி நேரம் கவனிப்பார் இன்றி இருந்ததாக குற்றம் சாட்டி வீடியோவை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, நோயாளி உதயகுமாருக்கு முகம் முழுவதும் சிதைந்து நொறுங்கி இருந்ததால் அவருக்கு உயர்தர மேல் சிகிச்சை தேவைப்பட்டது. இதனால் அவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அனுப்ப முடிவு செய்தோம். 

இதற்காக 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்துள்ளோம். மேலும் அவர் அவசர சிகிச்சை பிரிவிற்கு வந்த உடனேயே முறையான முதலுதவி சிகிச்சை அளித்து ஆக்சிஜன் குழாய்களையும் பொருத்தினோம். அதற்குப் பிறகு அவரை MD - ICU வார்டிற்கு மாற்றினோம். இதற்கு இடையில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் நோயாளியின் உறவினர் இது போன்ற ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். மேலும் இவர் இருந்த வார்டும் அவசர சிகிச்சை பிரிவின் அறைக்கு அருகிலேயே இருந்ததால் எப்போதும் மருத்துவர்கள் இருப்பார்கள் என்றும் தெரிவித்தனர். மேலும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு செல்ல விருப்பமில்லாததால் அவரை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர்.