கோயம்புத்தூரில் இருந்து மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சுமார் 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அதன்படி இப்பேருந்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள சமயநல்லூர் ரயில்வே மேம்பாலத்தின் மேலே கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற காரை, பேருந்து முந்தி செல்ல முயன்றுள்ளது. அச்சமயத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கார் மீது மோதியது. இதனால் கார் சாலையில் கவிழ்ந்தது.
அதே சமயம் பேருந்தும் சாலையின் பக்கவாட்டில் உள்ள தடுப்புச் சுவரில் ஏறி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒருவர் மற்றும் பேருந்தில் பயணித்த 11 பேர் என மொத்தம் 12 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவத்தைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக கார் மற்றும் பேருந்தில் இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மற்றொருபுறம் சமயநல்லூர் காவல் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் படி போலீசார் விரைந்து சென்று சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக இதேபோன்று நேற்று (19.01.2026) சமயநல்லூர் அருகே அரசு பேருந்தின் டயர் வெடித்து சாலையின் நடுவே கவிழ்ந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அடுத்தடுத்து இரண்டு நாட்களில் அரசு பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும்
ஏற்படுத்தியுள்ளது.
Follow Us