திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சமுத்திராப்பட்டி அமைந்துள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள், 12 பேர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் கணித வினாடி வினா போட்டியில் கலந்து கொள்வதற்காக சமுத்திராபட்டியில் இருந்து நத்தம் நோக்கி பயணிகள் ஆட்டோவில் சென்றுக் கொண்டிருந்தனர். இந்த ஆட்டோவை பூதகுடியை சேர்ந்த சந்திரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். 

Advertisment

அதன்படி இந்த ஆட்டோ நத்தம் அம்மன்குளம் அருகே வந்துள்ளது. அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து திடீரென ஆட்டோவின் பக்கவாட்டில் பலமாக மோதியது. இதில் ஆட்டோ தூக்கி வீசப்பட்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த சந்திராப்பட்டியை சேர்ந்த திவ்யஸ்ரீ, குகன், சாருமதி, மௌனிகா, ஹரிணிஸ்ரீ, ரியாராஜ், சம்பைப்பட்டியை சேர்ந்த பூமிகா, சுண்டக்காப்பட்டியை சேர்ந்த கோகிலா மற்றும் திருப்பதி, சாகுல் அமிது மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சந்திரன் உள்ளிட்டோர் பலத்த காயமடைந்தனர். 

Advertisment

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்த மேலூர் அருகே உள்ள சின்ன கற்பூரம்பட்டியை சேர்ந்தே நல்லியப்பன் மனைவி நைனம்மாள் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இறந்தவரின் உடல் உடற்கூராய்வுக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்த திவ்யஸ்ரீ, குகன் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவ மாணவிகள் பயணம் செய்த ஆட்டோ மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர், உயிரிழந்ததும், மாணவ மாணவிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்த சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment