காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் இருந்து இன்று (01.12.2025) அதிகாலையில், வேலைக்குச் செல்ல 20 பேரை ஏற்றிக்கொண்டு தனியாருக்குச் சொந்தமான வேன் ஒன்று செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே குன்னத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தது. அச்சமயத்தில் அங்குப் புதுச்சேரி நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்தும், வேனும் எதிர்பாராத விதமாக, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

Advertisment

இதனையடுத்து இந்த விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரு பெண்கள் உயிரிழந்தனர். அதே சமயம் விபத்தில் சிக்கிப் பலத்த காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம்  மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பூஞ்சேரி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்திற்கான காரணம் என்பது குறித்து போலீசாரின் முழு விசாரணைக்குப் பின்னரே தெரிய வரும் எனக் கூறப்படுகிறது. கல்பாக்கம் அருகே அரசுப் பேருந்தும் வேனும் மோதி விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், காரைக்குடி திருப்பத்தூர் சாலையில், கும்மங்குடி கிராமத்தில் நேற்று (30.11.2025) பிற்பகல் இரு அரசுப் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. 

ten-bus-ins

இந்த விபத்தில், பேருந்துகளில் பயணம் செய்த 9பெண்கள், 2 ஆண்கள் என மொத்தம் 11 நபர்கள் உயிரிழந்தனர். மேலும், 54 நபர்கள் காயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தென்காசி மாவட்டத்தில் இடைகால் என்ற இடத்தில் கடந்த 24ஆம் தேதி (24.11.2025) தனியார் பேருந்துகள் ஒன்றுக்கு ஒன்று நேருக்கு நேர் மோதி பயங்கரமாக விபத்துக்குள்ளானது. இதில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்ததும் கவனிக்கத்தக்கது. 

Advertisment