நாட்டின் 77வது குடியரசு தின விழா இன்று (26.01.2026) கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகத் தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள உழைப்பாளர் சிலை அருகில் இன்று காலை 8 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இந்த குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

Advertisment

இந்த நிகழ்வில் பல்வேறு பிரிவுகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களையும், விருதுகளையும் வழங்கினார். அதனை தொடர்ந்து குடியரசுத் தினத்தை பறைசாற்றும் விதமாக அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடினர். இதையடுத்து, தமிழக அரசின் ஒவ்வொரு துறை சார்ந்த திட்டங்களை காட்சிப்படுத்தி அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அரசு அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

Advertisment

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “சிதைவுறாத மிக நீண்ட தொடர்ச்சியால் பாரதம் ஜனநாயகத்தின் தாயாக உயர்ந்து நிற்கிறது. நமது மாநிலத்தில் மிகச்சிறந்த மனிதவளம் இருக்கிறது. சமூகத்தின் அனைத்து பிரிவினரும் தேசத்திற்கே முதன்மை என தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும். அறிவியல் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. நாம் ஒரு செழிப்பான விண்வெளி பொருளாதாரத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். இந்த தினத்தில், சுதந்திரத்துக்காக தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களை நினைவு கூர்வோம்” என்று பேசினார்.