தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (01.03.2026) தனது 73வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனையொட்டி சென்னை வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்திலும், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து திமுகவின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சித் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பிறந்த நாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மு.க. ஸ்டாலினுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியான நீண்ட ஆயுளுடனும் வாழப் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளையொட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “தமிழும் தமிழ்நாடும் நம் உயிர். அவற்றைக் காப்பது நம் கடமை. உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73ஆம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன்.
தமிழும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்த வரலாற்றில் நான் சிறுதொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்றிடவே நினைக்கிறேன். அந்த உறுதியோடுதான், திராவிட மாடலில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன். கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் போய்ச் சேர்ந்துள்ளது திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும், சாதனைகளும். தனிக்குணம் கொண்ட தமிழர் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர்; நாட்டிற்கே புத்தொளியை வழங்குகின்றனர் என்று புகழும் வகையில் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது!
நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது. சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன். இதுவே என் பிறந்தநாள் உறுதிமொழி. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் நமக்குக் காட்டிய பாதையில், தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும் எனப் போர்க்குணத்தோடு பயணித்து வெல்வோம் ஒன்றாக” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us