Governor RN ravi walked out because the national anthem was not sung in Legislative Assembly
நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (20-01-26) தமிழக சட்டமன்றத்தில் தொடங்கியது.
2026ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுடன் இன்று காலை 9:30 மணிக்கு கூடியது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு வந்தார். அவரை சபாநாயகர் அப்பாவு சால்வை அணிவித்து கலைஞர் சம்பந்தமான ஒரு புத்தகத்தை கொடுத்து வரவேற்பு அளித்தார். அவரை தொடர்ந்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், மலர் கொடுத்து புத்தகத்தை பரிசாக வழங்கி வரவேற்றார்.
அதனை தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது பேரவையில் முதலில் தேசிய கீதம் தான் பாட வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால், சட்டப்பேரவை மரபை சபாநாயகர் அப்பாவு எடுத்து கூறிய போது அதனை ஏற்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.
தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை சட்டமன்றத்தில் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சட்டப்பேரவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால் ஆளுநர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது, தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்தார். குறிப்பாக, ‘திராவிட மாடல்’ என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்தார். அதேபோல் ‘தமிழ்நாடு கவர்ன்மென்ட்’ என்ற வார்த்தைக்கு பதில் ‘திஸ்கவர்ன்மென்ட்’ என மாற்றினார். அப்போது சில சட்டமன்ற உறுப்பினர்கள் ‘தமிழ்நாடு வாழ்க’ எனக் கோஷமிட்டனர். இதனால், ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையை வெளியேறினார். இது பெரும் சர்ச்சையானது. இதே போல் கடந்த இரண்டு ஆண்டுகளிலும் பேரவை தொடங்கிய போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக முதலில் தேசிய கீதம் தான் பாட வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தி சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us