அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இரு முறை தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்தை தேசிய கீதத்திற்கு பிறகு பாட வைத்த ஆளுநர் ஆர்.என் ரவிக்கு தமிழ் உணர்வாளர்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

Advertisment

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 87-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு கலை, அறிவியல் மற்றும் மொழியியல், பொறியியல், கல்வி, இசை, வேளாண், மருத்துவம், கடல் வாழ் அறிவியல் உள்ளிட்ட 10 துறைகளைச் சார்ந்த 2014 மாணவ மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார். அதேபோல் மறைமுகமாக 35,815 பேருக்கு என 36 ஆயிரத்து 829 பேருக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கி வாழ்த்துக்களை கூறினார். 

Advertisment

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தில் வரலாற்று துறையில் ஆராய்ச்சி மாணவர் புஷ்பராஜ் என்பவர் பட்டங்களை வாங்கும் போது தமிழக தமிழக முதல்வரின் படத்தை பட்டத்தின் மீது வைத்து ஆளுநர் கையால் வாங்கினார். இது குறித்து அவர் கூறுகையில், ‘நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் பாட வேண்டும். ஆனால் முதலிலும் முடிவிலும் 2 முறை தேசிய கீதம் பாடி விட்டு பின்னர் தமிழ் தாய் வாழ்த்தை பாடுவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். தமிழ் வளர்த்த பல்கலைக்கழகத்தில் தமிழனின் கலாச்சாரங்களை கவர்னர் மாற்றி உள்ளார். தமிழகத்தில் துணைவேந்தராக தமிழக முதல்வர் நியமிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

அந்த தீர்மானத்தை கவர்னர் புறக்கணித்து விட்டார். தமிழக முதல்வர் அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களால் நான் பணம் உதவி பெற்று கல்வி பயின்று உள்ளேன். ஆகையால் நான் அவரிடம் பட்டம் வாங்கும் போது தமிழக முதல்வர் படத்தை பட்டத்தின் மீது வைத்துக் கொண்டு கையால் பட்டம் வாங்கியதாக நினைத்துக் கொண்டேன்’ என்றார். இதனால் பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

இது குறித்து விபரம் அறிய பல்கலைக்கழக பதிவாளர் சிங்கவேலுவை தொடர்பு கொண்டோம், போனை எடுக்க மறுத்து விட்டார். பின்னர் பல்கலைக்கழக வட்டாரத்தில் விசாரித்த போது கவர்னர் அலுவலகம் அனுப்பிய நிகழ்ச்சி நிரல் படி பட்டமளிப்பு விழா நடைபெற்றதாக கூறுகிறார்கள்.