“உங்களுடன் ஸ்டாலின்; 45 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு” - அரசு செய்தி தொடர்பாளர் அமுதா தகவல்

amutha

Government Spokesperson Amudha informed Petitions will be resolved within 45 days by ungaludan Stalin

தமிழகத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனிடையே, தமிழ்நாடு அரசு செய்தித் தொடர்பாளர்களாக ஜெ.ராதாகிருஷ்ணன், ககன்தீப் பேடி, தீரஜ் குமார், பெ.அமுதா ஆகிய 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. அரசின் முக்கியத்துறை தகவல்கள், திட்டங்களை ஊடகங்கள் மூலமாக மக்களுக்கு எடுத்துரைக்க செய்தி தொடர்பாளர்களை தமிழக அரசு நியமனம் சில மணி நேரத்திலேயே, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்து செய்தி தொடர்பாளர் பெ.அமுதா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார்.

அதில் பெ.அமுதா கூறுகையில், “முதல்வர், 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அரசின் தகவல் தொடர்பு அலுவலர்களாக நியமித்துள்ளார். இதனுடைய முக்கிய நோக்கம் என்னவென்றால், அரசாங்கத்துடைய செயல்பாடுகள், திட்டங்கள், தகவல்கள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும். அதற்கு ஊடகங்களிடம் நாங்கள் சரியான முறையில் அந்த தகவலை எடுத்துரைக்க வேண்டும். துல்லியமாகவும், விரைவாகவும் நேரடியாகவும் மக்களுக்கு தகவல்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக தான் இந்த ஏற்பாட்டை முதல்வர் செய்திருக்கிறார். நாளைக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நகராட்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கப் போகிறார். அந்த துறையின் சிறப்பு அதிகாரியாக நான் உள்ளேன். எங்களுடைய துறை பொதுத்துறையின் கீழ் வருகிறது.

நிறைய இடத்திற்கு செல்லும் போது மக்கள் முதல்வரிடம் மனு கொடுத்தார்கள். அந்த மனுக்களை எல்லாம் வாங்கி வந்து சி.எம் செல் மூலமாக தீர்வு கண்டு இருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், 100 பேர் கொண்ட கால் செண்டர் ஒன்று இருக்கிறது. அதன் மூலமாகவும் நிறைய பொதுமக்களுடைய குறைகள், மற்றும் சந்தேகங்களை எல்லாம் கேட்டு நிவர்த்தனை செய்து வருகிறார்கள். இதையெல்லாம் ஒருங்கிணைத்து முதல்வரின் முகவரித்துறை என்ற துறையை நவம்பர் 2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மக்களுக்கு என்ன பிரச்சனைகள் உள்ளதோ அதை அரசாங்கத்திடம் தெரிவிப்பதற்கும், அனைத்து துறைகள் மூலமாக நடவடிக்கையை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு விரைவான ஒரு தீர்வு காண வேண்டும் என்பது தான் இந்த துறையினுடைய நோக்கம். கடந்த 4 ஆண்டுகளில் 1 கோடியே 5 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில், ஜூன் 30 வரைக்கும் ஒரு கோடியே 1 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பல்வேறு திட்டங்களை பயன்பெறுவதற்காக அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனை தவிர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகமே மக்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று அவர்களின் பிரச்சனையை தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்திற்காக முதல்வர், கடந்த 2023 ஆம் ஆண்டு ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை அறிவித்தார். முதல் கட்டமாக நகரப்பகுதிகள் என்று சொல்லக்கூடிய இடத்தில் இந்த திட்டங்கள் நடைபெற்றது. சென்னை உள்ளிட்ட அனைத்து நகரப்பகுதிகளிலும் முகாம்கள் நவம்பர் 2023 முதல் ஜனவரி 2024 வரை நடைபெற்றது. 9 லட்சத்து 5,000 மனுக்கள் பெறப்பட்டு அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் எல்லாம், பட்டா மாற்றம், வரி உரிமை அனுமதி, முகவரி மாற்றம், இலவச வீட்டு மனை பட்டா இது மாதிரியாக தான் வந்தது.

அடுத்து இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதியில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டது. 2024 ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெற்றது. அந்த முகாம்களில் பெறப்பட்ட 95 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இரண்டு கட்டமாக நடத்தப்பட்ட முகாம்களில், மக்கள் அதிகமாக தேவைகள், திட்டங்கள் இது குறித்து தான் மனுக்களை கொடுக்கின்றனர். இரண்டு முகாம்களால் மக்களிடம் பெரும் ஆதரவு வந்ததால் மூன்றாம் கட்டமாக நடத்த வேண்டும் என்று முதல்வர் நினைத்தார். அதன்படி, ஜனவரி 21ஆம் தேதி ஆரம்பித்து ஜூன் 30ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட முகாம் நடத்தப்பட்டன. இப்போது அடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறோம். நாம் முகாம்கள் நடத்துகிறோம் என்று மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காக தான் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். முகாம்கள் நடத்தப்படுவதற்கு முன்பாகவே, தன்னார்வாலர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று முகாம்கள் குறித்து தெரிவிப்பார்கள். இந்த திட்டத்தில் மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி துறைகள் மூலம் வரக்கூடிய பதில்களை உடனடியாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அந்த மனு யாரிடம் கொடுத்தது? எங்கே போயிருக்கிறது? எத்தனை நாள்? என்ன பதில் கொடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் டிராக் செய்ய முடியும். 30 நாள் ஆகிவிட்டது என்றால், ஏன் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்களிடம் கேள்வி எழுப்ப முடியும்.

கொடுக்கக்கூடிய பதில் திருப்தியாக இல்லையென்றால் மக்கள் எங்களிடம் மேல்முறையீடு செய்யலாம். அந்த மனுவையும் உயர் அதிகாரிகளிடம் அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வைப்போம்.  ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறக்கூடிய மனுக்களுக்கு 45 நாட்களுக்கு தீர்வு காண வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். இந்த பணிக்காக 1 லட்சம் தன்னார்வாலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். நாளை தொடங்கி நவம்பர் மாதம் வரைக்கும் இந்த முகாம்கள் நடத்தப்படும். மொத்தம், 10,000 முகாம்கள் நடத்தப் போகிறோம். வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என 4 நாட்கள் முகாம்கள் நடத்தப்படும்” என்று தெரிவித்தார். 

m.k.stalin mk stalin spokesperson ungaludan stalin
இதையும் படியுங்கள்
Subscribe