இந்தியாவில் ஜவஹர்லால் நேரு பிறந்த நவம்பர் 14-ம் தேதியைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி வருகின்றோம். இந்த நாளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இனிப்பு, பூ கொடுத்து வாழ்த்து சொல்வதும், கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவிகளுக்கு குழந்தைகள் தின சிறப்புக் கலை நிகழ்ச்சிகள் நடத்திப் பரிசுகள் வழங்கிப் பாராட்டுவதும் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நாளைக் கொண்டாடாத பள்ளி, கல்லூரிகள் இருக்காது என்றே கூறலாம்.
அதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 28 மாணவிகளை மருத்துவர்களாக்கிய கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா பள்ளித் தலைமை ஆசிரியை வள்ளிநாயகி தலைமையில் பேரூராட்சித் தலைவர் சிவக்குமார் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் முன்னிலையில் நடந்தது. விழாவில் மாணவிகளின் நடனம், பாடல்கள் அனைவரையும் கவர்ந்தன.தொடர்ந்து பள்ளி இசை ஆசிரியை விஜயா அன்பரசன் குழந்தைகளுக்காகப் பாடிய பாடல்கள் மாணவிகளை ரொம்பவே கவர்ந்தன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/14/01-2025-11-14-19-02-05.jpg)
கலை நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் பள்ளி மாணவிகள் வரிசையாக அமரவைக்கப்பட்டு வாழை இலை போட்டு பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், பள்ளி மேலாண்மைக் குழுவினர் சொந்தச் செலவில் தயாரிக்கப்பட்ட சைவ பிரியாணியை ஆசிரியர்களே மாணவிகளுக்குப் பரிமாறி மகிழ்ந்தனர். சுமார் 1000 மாணவிகளுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, எங்கள் பள்ளியில் தொடர்ந்து 10 ஆண்டுகளாகக் குழந்தைகள் தினத்தில் அவர்களை மகிழ்விக்க வாழை இலையில் பிரியாணி விருந்து கொடுத்து மகிழ்கிறோம். அதேபோல மாணவிகள் ஆசிரியர்களான எங்களுக்குப் பரிமாறினர். இந்த நாள் இனிய நாளாக அமைந்தது என்றனர்.
மாணவிகளோ, நாங்கள் ஆசிரியர் - மாணவிகள் பாகுபாடு பார்க்காத பள்ளியில் படிப்பதே பெருமையாக உள்ளது. குழந்தைகள் தினத்தில் தொடர்ந்து பிரியாணி விருந்து கொடுக்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். இப்போது +2 படிக்கும் நாங்கள் தேர்வு முடிந்து வெளியே போகிறோம். நாங்க இந்த இனிய நாளை மிஸ் பண்ணப்போகிறோம். ரொம்ப வருத்தமாகத்தான் உள்ளது என்றனர்.
Follow Us