உதவி ஆசிரியரை துன்புறுத்திய புகாரில் விசாரணைக்கு அழைத்த கல்வி அதிகாரியை அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஒருவர் பெல்ட்டால் அடித்து விளாசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தின் மஹ்முதாபாத் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பணிபுரிந்து வந்த பள்ளித் தலைமை ஆசிரியர் பிரிஜேந்திர வர்மா தன்னை துன்புறுத்தியதாக உதவி ஆசிரியர் ஒருவர் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த பிரிஜேந்திர வர்மாவை கல்வி அதிகாரி அகிலேஷ் பிரதாப் சிங் தனது அலுவலகத்திற்கு வரவழைத்தார்.
தலைமை ஆசிரியரையும், உதவி ஆசிரியரையும் ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும்படி கல்வி அதிகாரி அகிலேஷ் பிரதாப் சிங் விசாரணை நடத்தினார். அதில் தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியரை துன்புறுத்தியிருப்பதாக தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த தலைமை ஆசிரியர் பிரிஜேந்திர வர்மா, அகிலேஷ் பிரதாப் சிங்கிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பிரிஜேந்திர வர்மா, தனது கையில் இருந்த கோப்பையை மேஜையின் மீது தூக்கி எறிந்தார். அதன் பின்னர், தான் அணிந்திருந்த பெல்ட்டை அகற்றி அதிகாரி அகிலேஷ் பிரதாப்பை மீண்டும் மீண்டும் அடித்தார். இதில் அகிலேஷ் பதற்றமடைந்த எழுந்து நின்று அடியில் இருந்து தப்பிக்க முயன்றார்.
இந்த சத்தத்தை கேட்ட அலுவலக ஊழியர்கள் உடனடியாக உள்ளே வந்து வர்மாவைத் தடுத்து நிறுத்தி வெளியே அனுப்பினர். அதன் பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ வைரலனாதை தொடர்ந்து, கல்வி அதிகாரியை தாக்கிய வர்மா மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வர்மாவை போலீசார் கைது செய்தனர். மேலும், கல்வி அதிகாரியால் வர்மா உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.