சிவகாசியிலிருந்து மாற்றலாகிச் செல்லும் காவல்துறை அதிகாரிக்காக ஓய்வுபெற்ற ஏட்டய்யா ஒருவர் பட்டாசுக் கடைகளுக்குச் சென்று பட்டாசுப் பார்சல்களை அள்ளிச்செல்கிறார். அந்தப் பட்டாசுப் பார்சல்கள் எல்லாம் செக்ரட்டரியேட் வரை பயணிக்கிறது.’ என்ற தகவல் நமக்குக் கிடைத்ததும், மொழியைக் காக்கும் பெயரைக் கொண்ட அந்த ரிட்டயர்ட் ஏட்டய்யாவிடம் பேசினோம். “நான் அந்தமாதிரி ஆளு இல்லீங்க..” என்று ஒரே போடாகப் போட்டுவிட்டு, அந்த உயரதிகாரியிடம் நம்மைப் பேசவைத்தார். அந்த அதிகாரியும் “நக்கீரன் என்னைப் பத்தி என்னைக்கு நல்லா எழுதுச்சு? எல்லாரும் சேர்ந்து என்னை ஊரைவிட்டு கிளப்பணும்னு நெனச்சாங்க. அது நடந்திருச்சு. நீங்க என்ன வேணும்னாலும் எழுதிக்கங்க.” என்று விட்டேத்தியாகப் பேசிவிட்டு லைனை கட் செய்தார்.
சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் இருவர் பட்டாசுக் கடைக்காரரை மிரட்டி பணம் கேட்பதாக சோர்ஸ் ஒன்று தகவல் தர, அவர்களில் ஒரு போலீஸ்காரரை தொடர்புகொண்டோம். அவரோ, எஸ்.ஐ. மேடத்தை நம்மிடம் பேசவைத்தார். அந்த மேடம் “போலீஸ்காரங்க பணம் கேட்டு மிரட்டுறதா புகார் எதுவும் வந்துச்சுன்னா.. சம்பந்தப்பட்ட பட்டாசுக் கடைக்காரரை என்கிட்ட பேசச் சொல்லுங்க. நான் நடவடிக்கை எடுக்கிறேன்.” என்றார் கூலாக. அடுத்த சில நிமிடங்களில் நமது லைனுக்கு வந்த ஒரு காக்கிச் சட்டை “அந்தப் பட்டாசுக் கடைக்காரர், வெளியிலிருந்து கள்ளத்தனமாகப் பட்டாசுகள் வாங்கி, ஒரு இடத்தில் வைத்து இல்லீகலாக பேக் செய்திருக்கிறார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உயிர் பயத்தில் காவல்துறைக்கு தகவல் தந்திருக்கிறார்கள். அந்த இரண்டு போலீஸ்காரர்களும் அங்கு சென்று பட்டாசுக் கடைக்காரரை விசாரித்திருக்கிறார்கள். பணம் கேட்டெல்லாம் மிரட்டவில்லை. அந்த ஆளு எப்பவுமே இப்படித்தான். போலீஸ்காரர்களை மீடியாவிடம் மாட்டிவிட்டு, தன்னைக் காத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.” என்றார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/10/14/untitled-2-2025-10-14-18-25-58.jpg)
பட்டாசுத் தொழிற்சாலைகளோ, பட்டாசுக் கடைகளோ அரசுத் துறையினர் மாமூல் வாங்குவது காலம் காலமாகவே நடந்து வருகிறது. தீபாவளி நெருங்கும் நேரத்தில் அரசுத் துறையினர் சிலர் பேய்த்தனமாக வசூல் வேட்டை நடத்துவார்கள். விருதுநகரிலும்கூட அப்படித்தான் நோட்டு போட்டு வசூல் செய்திருக்கிறார்கள் தீயணைப்புத் துறையினர். டெக்னாலஜி காட்டிக்கொடுத்துவிடும் என்ற பயமே இல்லாமல், ஜி-பே, போன்-பே மூலம் எல்லாம் மாமூல் வாங்கியிருக்கிறார்கள்
தகவல் கிடைத்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் விருதுநகர் தீயணைப்பு நிலையத்துக்கு இரவில் சென்று சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ.59,000-ஐ பறிமுதல் செய்துள்ளனர். பட்டாசுக் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் பலவற்றிலும் அரிச்சந்திரன், நவநீத கிருஷ்ணன், வினோத் ஆகிய தீயணைப்பு வீரர்கள் மூவரும் வசூல் நடத்தியுள்ளனர். இவர்களில் வினோத், தீபாவளி இனாமாக ரூ.4,38,500 வசூல் செய்ததோடு, வங்கிக் கணக்கில் ரூ.3,79,000-ஐ டெபாசிட் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
“தீபாவளியை நல்லவிதமாகக் கொண்டாடுபவர்கள் அனேகம்பேர் இருக்கிறார்கள். நாடி நரம்பில் எல்லாம் லஞ்ச சிந்தனையில் ஊறிப்போன சில அரசுத் துறையினருக்கோ, முறைகேடான வழிகளில் பணத்தைக் குவிப்பதற்கு வசதியாக, ஒரு சீசனைப் போல் வருடம்தோறும் தீபாவளி வந்துபோகிறது.” என்றார், தோழர் வெங்கடேசன்.
Follow Us