ராஜஸ்தானின் மூத்த அரசி அதிகாரி, தனது மனைவியை இரண்டு கம்பெனிகளில் சேர்த்து அவரை வேலைக்கே அனுப்பாமல் ரூ.37 லட்சத்தை நூதன முறையில் லஞ்சமாக பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறையின் இணை இயக்குநராக பிரத்யுமன் தீட்சித் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களுக்கு டெண்டர்களை வழங்கி வருவதாகவும், இவரது மனைவி பூனம், வேலைக்குச் செல்லாமல் சம்பளம் பெற்று வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை கடந்தாண்டு செப்டம்பர் 6ஆம் தேதி வந்த போது இந்த வழக்கை விசாரிக்க ராஜஸ்தான் மாநில ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டது. அதன்படி, மாநில ஊழல் தடுப்பு பிரிவு, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி மாநிலத்தையே அதிர வைத்துள்ளது.
அதாவது, மூத்த அரசு அதிகாரியான பிரத்யுமன் தீட்சித், ஆரியன்ப்ரோ சொல்யூஷன்ஸ் லிமிடெட் மற்றும் ட்ரைஜென்ட் சாப்ட்வேர் பிரைவேட் லிமிடெட் ஆகிய இரண்டு தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு தனது துறையில் கீழ் வரும் அரசாங்க பணிக்கு டெண்டர்களை வழங்கியுள்ளார். அதற்கு பிரதிபலனாக, தனக்கு நேரடியாக லஞ்சம் வழங்காமல் தனது மனைவி பூனம் தீட்சித்தை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்றும் லஞ்சத்துக்கு பதிலாக மாந்தோறும் அவருடைய வங்கிக் கணக்குகளில் சம்பளம் வழங்க வேண்டும் என்று அந்த இரண்டு நிறுவனங்களிடம் தீட்சித் கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, அந்த நிறுவனங்களும், பூனத்துக்கு மாந்தோறும் ரூ.1.60 லட்சத்தை சம்பளமாக கொடுத்துள்ளன. ஜனவரி 2019 முதல் செப்டம்பர் 2020 வரை, அந்த இரண்டு நிறுவனங்களும் பூனம் தீட்சித்தின் 5 தனிப்பட்ட கணக்குகளுக்கு மொத்தமாக ரூ.37,54,405 பணத்தை அனுப்பியுள்ளது. இந்த காலகட்டத்தில், பூனம் இந்த இரண்டு அலுவலகங்களுக்கும் செல்லாமலேயே சம்பளத்தை பெற்றுள்ளார். இரண்டு நிறுவனங்களும் எங்கு இருக்கிறதே என்றே பூனத்துக்கு தெரியாத நிலையில், ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களிலும் அவர் வேலை செய்ததாக கணக்கு காட்டியிருக்கின்றனர்.
ஆனால், தனது மனைவி அந்த நிறுவனங்களில் வேலை செய்தார் என்பதை காட்ட வருகைப் பதிவேட்டில் தீட்சித் கையெழுத்து போட்டு இருக்கிறார். இந்த ஊழல் மோசடிக்கு பிரத்யுமன் பணிபுரியும் அதே துறையில் துணை இயக்குநர் ராகேஷ் குமார் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநிலத்தையே அதிர வைத்த ஊழல் மோசடி சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/28/go-2025-10-28-19-00-54.jpg)