'Government is ready to deal with any heavy rain' - Chief Minister's interview after the study Photograph: (mkstalin)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில் அடுத்த ஆறு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அமுதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அறிவிப்பில், தெற்கு கேரளா, குமரிக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெறுகிறது. தெற்கு அந்தமான், தென்கிழக்கு வங்கக் கடலில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. வரும் அக்டோபர் 21ம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி தென்கிழக்கு வங்கக்கடலில் மண்டலமாக வலுப்பெறும் சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளது. எனவே அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும்.
அக்டோபர் 23 முதல் 25ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டு கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. நாளை தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 11 மாவட்டங்களுக்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழக கடலோரம், லட்சத்தீவு, கேரளா, கர்நாடக கடலோர பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம். அக்டோபர் 21ம் தேதி காலைக்குள் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும் என்ற அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரக்கால செயல்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பருவமழை காரணமாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதல்வர், ''எவ்வித பெரிய மழை வந்தாலும் அதை சமாளிக்க அரசு தயாராக உள்ளது. தேனி, விருதுநகர், ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்துள்ளது. அதிக கனமழை பெய்த இடத்தில் எந்தவிதமான அபாயமும் இதுவரை ஏற்படவில்லை. பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். காவிரி படுகை மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தவறான செய்தி கூறுகின்றார்'' என தெரிவித்துள்ளார்.