குழந்தை இறந்துவிட்டது என அரசு மருத்துவமனை அறிவித்த 12 மணி நேரத்திற்கு பிறகு உயிரோடு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், அம்பஜோகை நகரில் சுவாமி ராமனாந்த் திரிதா அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாலிகா குகே என்ற பெண்ணுக்கு கடந்த ஜூலை 7ஆம் தேதி இரவு நேரத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், அன்று இரவு 8 மணிக்கே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள், பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர். இரவு நேரம் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு வரவில்லை. அதனால் அன்று இரவு முழுக்க இறந்ததாகக் கூறப்படும் குழந்தை மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டது.

இதையடுத்து அடுத்த நாள் காலை குழந்தையின் தாத்தா மருத்துவமனைக்கு வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு அடக்கம் செய்வதற்காக தனது கிராமத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அடக்கம் செய்வதற்காக குழி தோண்டப்பட்டது. இதற்கிடையில், குழந்தையின் பாட்டி குழந்தையின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன்படி, குழந்தை மீது போர்த்தப்பட்டிருந்த துணியை விலக்கி பார்த்த போது, இறந்ததாகக் கூறப்படும் அந்த குழந்தை திடீரென அழத் தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக குழந்தையை தூக்கிக் கொண்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தை சிகிச்சைப் பெற்று வருகிறது.

இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்குப் பிறகு, ஜூலை 8 ஆம் தேதி காலை 7:00 மணியளவில் குழந்தை உயிருடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மருத்துவமனையில் தலைமை மருத்துவர் ராஜேஷ் காச்ரே கூறுகையில், ‘ஜூலை 7 ஆம் தேதி, ஒரு பெண் மருத்துவமனைக்கு வந்தார், அவரது கர்ப்பத்தின் காலம் 27 வாரங்கள். அவரது கர்ப்பத்தில் சிக்கல்கள் இருந்தன, ஜூலை 7 ஆம் தேதி மாலை 7:00 மணிக்கு பிரசவம் நடந்தது. ஆண் குழந்தையின் எடை 900 கிராம். குழந்தை பலவீனமாகவும், எடை குறைவாகவும் இருந்தது. குழந்தை உயிரோடு இருப்பதற்கான எந்த மருத்துவ அறிகுறிகளும் தென்படவில்லை. குழந்தை எந்த சிகிச்சைக்கும் பதிலளிக்கவில்லை, எனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த நாள், குடும்பத்தினர் குழந்தை உயிரோடு இருந்ததைக் கவனித்து மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். குழந்தை தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் ஏன் நடந்தது என்பதை விசாரிக்க, மருத்துவமனை நிர்வாகத்தால் இரண்டு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் என கண்டறியப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Advertisment

குழந்தையின் தாயார் பாலிகா குகே கூறுகையில், ‘நள்ளிரவு குழந்தையை ஒரு பெட்டிக்குள் வைக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து குழந்தையை எடுத்துச் செல்லும் போது ஏதோ ஒரு அசைவை நாங்கள் கண்டோம். இது குறித்து செவிலியரிடம் தெரிவித்த போது, அவர் அதை மறுத்து குழந்தை இறந்துவிட்டதாகக் கூறினார். இருப்பினும், குழந்தையை நாங்கள் கிராமத்திற்கு எடுத்துச் சென்ற போது உண்மை வெளிவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து குடும்பத்தினர் எந்தவித புகாரும் கொடுக்கவில்லை. இருப்பினும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.