கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள மூக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ பிரபாகரன். இவருக்கு மசக்கவுண்ட செட்டிபாளையம் பகுதியில் 15 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் வீட்டுமனையாகப் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றதாக இருந்தாலும், அதற்கு உரிய வீட்டுமனை அங்கீகாரம் பெறப்படவில்லை. இதற்காக, ராஜ பிரபாகரன், ஊராட்சி செயலாளரான ரங்கசாமி என்பவரை அணுகினார்.
இதையடுத்து, ரங்கசாமி, வீட்டுமனை அங்கீகாரம் வழங்குவதற்கு முறையான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு பதிலாக, ராஜ பிரபாகரனிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. முதற்கட்டமாக, 15,000 ரூபாய் லஞ்சமாக பணத்தை கேட்டு பெற்றுள்ளார். பின்னர், மேலும் 19,000 ரூபாய் லஞ்சமாகத் தருமாறு மீண்டும் அழுத்தம் கொடுத்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ பிரபாகரன், மேற்கொண்டு லஞ்ச பணம் கொடுக்க மறுத்துள்ளார். இருப்பினும், லஞ்சப் பணம் செலுத்தினால் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும் என்று ரங்கசாமி கூறியதால், ராஜ பிரபாகரன் நிர்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ராஜ பிரபாகரன், கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினரை அணுகி, ரங்கசாமி குறித்து புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், ரசாயனம் தடவப்பட்ட 19,000 ரூபாய் நோட்டுகளை ராஜ பிரபாகரனிடம் வழங்கி, அவற்றை ரங்கசாமியிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதன்படி ராஜ பிரபாகரன், அந்த பணத்தை ரங்கசாமிக்கு அளித்தார்.
ஆனால், ரங்கசாமி, லஞ்சப் பணத்தை நேரடியாகப் பெறாமல், ஊராட்சி அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராகப் பணிபுரியும் பூபதி என்பவரைப் பயன்படுத்தி, அவர்மூலம் பணத்தைப் பெற்றுக்கொண்டார். பணம் பரிமாறப்பட்டவுடன், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர், ரங்கசாமி மற்றும் பூபதி ஆகியோரை கையும் களவுமாகக் கைது செய்தனர்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார், ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் அவரது குழுவினர் கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, ஊராட்சி செயலாளர் ரங்கசாமி மற்றும் பூபதி ஆகியோர், கோவை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.