அண்மையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ எனும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார். இந்தத் திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது

Advertisment

இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி சிவகங்கையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மக்கள் அளித்த மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்து விசப்பட்டிருந்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து வாங்கப்பட்ட மனுக்கள் மிதப்பதாக கார்த்திக் என்ற நபர் போலீஸாருக்கு தகவல் கொடுத்த நிலையில், ஆற்றுப் பகுதிக்கு வந்த போலீஸார் தண்ணீரில் மிதந்த மனுக்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த மாதம் 21 மற்றும் 22-ம் தேதிகளில் சிவகங்கையின் கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை, பூவந்தி, ஏனாதி, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது.  இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்தச் சம்பவம் குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கத்தில், வைகை ஆற்றில் கிடந்த மனுக்கள் அனைத்தும் நகல்கள் என்றும், குறைகள் தீர்க்கப்பட்ட மனுக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சர்வே அலுவலகத்தில் இருந்த மனுக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று அவற்றை வைகை ஆற்றில் வீசியதாக வட்டாட்சியர் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

Advertisment

அப்போது, நில அளவை வரைவர் முத்துகுமரனிடம் போலீஸார் விசாரணை செய்தபோது, சக ஊழியரைப் பழிவாங்க ‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்களை ஆற்றில் அவர் வீசியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அரசு ஆவணங்களைத் திருடிய புகாரில் முத்துகுமாரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், மனுக்களை எடுத்துச் சென்ற ஸ்கூட்டரையும் பறிமுதல் செய்த போலீஸார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.