Advertisment

அரசு மருத்துவமனையின் அட்ராசிட்டி; தலைவலிக்கு 100 சுகர் மாத்திரைகளை வழங்கிய மருத்துவர்!

2

கடந்த அதிமுக ஆட்சியின் போது கிருஷ்ணகிரி அடுத்த  போலூர்பள்ளி என்ற பகுதியில் சுமார் ரூ.350 கோடி மதிப்பில் பிரமாண்டமாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் மருத்துவமனையின் அனைத்து பணிகளும் முடிந்து திமுக ஆட்சியில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மட்டுமின்றி திருப்பத்தூர் மாவட்டம், அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஏழை மக்கள் என நாள் ஒன்றுக்கு 2500 முதல் 3000 பேர் வரை இந்த மருத்துவமனைக்கு புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். 300-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் இருந்து வருகின்றனர்.

Advertisment

மருத்துவமனை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த ஆரம்பத்தில் மிகுந்த பய பக்தியுடன் செயல்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் தற்போது பெயரளவுக்குக் கூட தங்களது பணிகளை முறையாக மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த சில மாதங்களாகவே எழுந்து வருகிறது. இந்த நிலையில்தான் அதனை உறுதிப்படுத்தும் விதமாக நடந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அடுத்த பொடார் கிராமத்தைச் சேர்ந்தவர் 36 வயதான விஜயகலா. இவர் போலூர்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 6-ஆம் தேதி காலை வழக்கம் போல் வேலைக்குச் சென்றபோது அவருக்கு தலைவலி ஏற்பட்டது. அதனால் சிகிச்சைக்காக அருகிலேயே உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு வழக்கம் போல் கம்ப்யூட்டரில் புறநோயாளிக்கான சீட்டு பதிவு செய்யப்பட்டு நம்பர் 102-ஆவது அறைக்குச் செல்லுமாறு பரிந்துரைக்கப்பட்டது. அங்கு சென்ற விஜயகலா, அங்கிருந்த மருத்துவரிடம் தலைவலி எனக் கூறியுள்ளார். அவர் சீட்டை வாங்கி பார்த்துவிட்டு, அதில் ENT என எழுதி நம்பர் 203வது அறைக்குப் போய் பாருங்க? என விஜயகலாவை அனுப்பிவைத்துள்ளார். அங்கு சென்று பார்த்தபோது மருத்துவர் ஒருவர் மருத்துவம் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

பின்னர் அவரிடம் புறநோயாளிகள் சீட்டை காட்டியதற்கு, “வாங்கம்மா இங்க உட்காருங்க...” எனக் கூறியவர், அவரை வைத்தே அங்கிருந்த மாணவ, மாணவிகளுக்கு தொண்டை குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்துள்ளார். ஒன்றும் புரியாமல் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தலைவலியிலேயே இருந்த விஜயகலா, “சார் ரொம்ப தலைவலிக்குது மருந்து கொடுங்க...” எனக் கேட்டு ஒரு வழியாக, மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு, அங்கிருந்து ஊசி போடும் இடத்திற்குச் சென்றுள்ளார். அதன்பிறகு ஊசி போட்டுக் கொண்டு, 40 நிமிடங்களுக்கும் மேலாக வரிசையில் நின்று மருந்தை வாங்கியுள்ளார். பின்னர் அதனைப் பிரித்து பார்த்தபோது 100-க்கும் மேற்பட்ட மாத்திரைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக மருந்து வழங்கிய நபரிடமே சென்று விஜயகலா கேட்டபோது, அவரோ, “ஏம்மா ஒரு நாளைக்கு நீ 6 மாத்திரை சாப்பிடணும், சுகர், BP எல்லாம் வச்சிகிட்டு எடுத்துட்டு வந்துட்ட போமா....” என விரட்டியுள்ளார்.

பின்னர் மீண்டும் நம்பர் 102-வது அறையில் இருந்தவரிடம் போய் கேட்டுள்ளார். அவரோ, “நம்பர் 203-வது அறைக்குப் போய் கேளும்மா..” என அனுப்பிவைத்துள்ளார். வேறு வழியின்றி விஜயகலாவும் போய் கேட்டுள்ளார். அதற்கு அங்கு இருந்த மருத்துவரோ, “சாரிம்மா தெரியாம கொடுத்துட்டோம்..” எனக் கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த விஜயகலா, “சாரி என்று சொல்லிவிட்டீர்களே, தெரிந்த எனக்கே இப்படி என்றால் தெரியாதவர்கள் என்ன செய்வார்கள், நாங்க உங்களைத் தானே நம்பி வருகிறோம்..” என்று நியாயம் கேட்டுள்ளார். அதற்கு அலட்சியமாக அந்த மருத்துவர், “இதெல்லாம் டீன் கிட்ட போய் பேசுங்க..” எனக் கூறியுள்ளார், அங்கு சென்று கேட்டபோதும் அங்கு அவருக்கு முறையாக யாரும் பதில் சொல்லவில்லை. இதனால் வேறு வழியின்றி வெளியே சென்று தனியார் மெடிக்கலில் மாத்திரை வாங்கி சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளார். 

தலைவலி என சிகிச்சை பெற அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்த பெண்ணுக்கு சுகர் மாத்திரை கொடுத்து தினமும் 6 மாத்திரைகள் சாப்பிட சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

woman Doctor govt hostel
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe