தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு அருகேயுள்ள அகிலாண்டபுரம் கிராமத்திற்கு அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஜூலை 16 ஆம் தேதி நண்பகலில், வழக்கம்போல அகிலாண்டபுரத்திலிருந்து கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் நோக்கி 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசுப் பேருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் சிவகுருநாதன் ஓட்டிச் சென்றார், மேலும் பிரபாகரன் கண்டக்டராகப் பணியாற்றினார்.

அகிலாண்டபுரம் கிராமத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து, வில்லிசேரி கிராமத்திற்குள் பேருந்து திரும்ப முயன்றபோது, ஓட்டுநர் சிவகுருநாதனின் இடது கை திடீரென மரத்து, செயலிழந்து, உடல் நலம் பாதிக்கப்பட்டது. நிலைமையை உணர்ந்த சிவகுருநாதன், சமயோசிதமாக செயல்பட்டு, தேசிய நெடுஞ்சாலையில் இரு புறங்களுக்கும் இடையேயான வளைவு இடைவெளியில் பேருந்தை நிறுத்தி, பயணிகள் அனைவரையும் பத்திரமாக இறங்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும், தனது இடது கையில் வலி ஏற்பட்டு, கையை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கண்டக்டரிடமும், சக பயணிகளிடமும் தெரிவித்திருக்கிறார். வில்லிசேரி பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பொதுமக்களில் ஒருவர் உடனடியாக சிவகுருநாதனை பத்திரமாக மீட்டு தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று, வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

இதனைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் நடுவழியில் நின்றிருந்த அரசுப் பேருந்தை, பொதுமக்கள் ஒன்றிணைந்து சாலையோரம் நகர்த்தி நிறுத்தினர். மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், ஒவ்வொரு நொடியும் மின்னல் வேகத்தில் வாகனங்கள் செல்லும் நிலையில், சாலையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பேருந்தைத் திருப்ப முயன்றபோது, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு இடது கை செயல்படாமல் போன நிலையிலும், ஓட்டுநர் சிவகுருநாதன் சமயோசிதமாக செயல்பட்டு, பேருந்தை உடனடியாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், பள்ளி மாணவர்கள் உட்பட பயணிகளாக இருந்த பொதுமக்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் கயத்தாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, இடது கை செயலிழந்த நிலையில், அவரது சமயோசிதமான செயல்பாடு பெரும் விபத்தைத் தவிர்த்து, பயணிகளைப் பாதுகாத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி