வேலூர் மாவட்டம், லத்தேரி அருகே உள்ள பட்டியூர் மற்றும் எடப்பாளையம் கிராமங்களின் பேருந்து நிறுத்தங்களில், பெண்கள் கைகாட்டியும் நிற்காமல் சென்ற அரசு மகளிர் விடியல் பேருந்தை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தடுத்து நிறுத்தி, பேருந்து ஓட்டுநரிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்பாடியிலிருந்து குடியாத்தம் நோக்கி இயக்கப்படும்  அரசு மகளிர் விடியல் பேருந்து, இன்று (ஆகஸ்ட் 10) காலை பட்டியூர் மற்றும் எடப்பாளையம் கிராமங்களின் பேருந்து நிறுத்தங்களில் பயணிகள், குறிப்பாக பெண்கள், கைகாட்டிய போதிலும் நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட முகமது என்ற ஆட்டோ ஓட்டுநர், பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்திருந்த வயதான பயணிகளை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு, பேருந்தை விரைந்து முந்திச் சென்று தடுத்து நிறுத்தினார். பின்னர், அவர் அந்தப் பயணிகளை பேருந்தில் ஏற்றிவிட்டு, ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது முகமது, “பேருந்து காலியாக இருந்தும் ஏன் நிறுத்தாமல் செல்கிறீர்கள்? வயதானவர்கள் மற்றும் பெண்கள் நீண்ட நேரம் காத்திருப்பது உங்களுக்கு தெரியவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பேருந்து ஓட்டுநர், “எல்லா இடங்களிலும் வண்டியை நிறுத்த முடியாது. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் புகார் செய்யுங்கள்,” என்று தெனாவட்டாக பதிலளித்துவிட்டு பேருந்தை ஓட்டிச் சென்றார்.

இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன, மேலும் பொதுமக்கள் மத்தியில் அரசு பேருந்து ஓட்டுநர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.