தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமையில் அவரது ஆதரவாளர்களோடு கடந்த ஜூலை மாதம் 31ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தனது உறவை முறித்துக் கொண்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இனி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம்பெறாது. எந்த கட்சியுடனும் கூட்டணி என்பது இன்றைய நிலையில் இல்லை. எதிர்காலத்தில் நிலைமைகளுக்கேற்ப கூட்டணியை முடிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது என முடிவெடுக்கப்பட்டது.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முடிவு எடுக்கப்பட்ட அன்று மாலையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து இருந்தது பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம் செய்தியாளர்கள் ஓபிஎஸ் பாஜகவில் இருந்து வெளியேறியது குறித்தும், உங்கள் கூட்டணிக்கு ஓபிஎஸ் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா எனவும் கேள்வியை முன்வைத்தனர்.
அதற்குப் பதிலளித்த திருமாவளவன், ''கூட்டணி வலிமை பெற்றால் மகிழ்ச்சி தான். யார் யாரைக் கூட்டணிக்குள் இணைக்க வேண்டும் என்று முடிவு எடுக்கும் அதிகாரம் கூட்டணியின் தலைவருக்கு உண்டு. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறோம் வெளிப்படையாக சாதியவாதத்தைப் பேசுகின்ற மதவாதங்களை உயர்த்திப் பிடிக்கின்ற அரசியல் கட்சிகளைத் தவிர மற்ற அனைத்தும் எங்களுக்கு தோழமை இயக்கங்கள் தான். அவர்களோடு எங்களால் பயணிக்க முடியும். ஆகவே ஓபிஎஸ் அல்லது தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணிக்கு வருமேயானால் அதனால் எங்களுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. எந்த சிக்கலும் இல்லை. பாஜகவின் பிடியிலிருந்து ஓபிஎஸ் வெளியே வருகிறார் என்பதே ஒரு மாற்றம்தான். அதற்காக அவரை வரவேற்கவும் பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஓபிஎஸ் வெளியே வந்திருப்பதால் அவருக்கு நல்ல காலம் பிறந்து இருக்கிறது'' என்றார்.