மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்த புள்ளி கோரியது. அதாவது 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை அரசின் எல்காட் நிறுவனம் கோரியிருந்தது. அதில், ‘கொள்முதல் செய்யப்படும் லேப்டாப்பானது 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6 இஞ்ச் அளவில் டிஸ்பிளே இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து டெல், ஏசர், லெனோவா, ஹச்பி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்கள் இந்த ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டின.
அதன்படி மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதற்கிடையே சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் (06.08.2025) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “கல்லூரியில் படிக்கும் 20 இலட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் தரப்போகிறோம்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை டிசம்பர் 19ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்க உள்ளார்.அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. அதோடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் இது என்பது குறிப்பிடத்த்க்கது.
Follow Us