பெருநகர சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் மேற்கொள்ள வேண்டிய தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்குத் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கி கடந்த ஜூன் மாதம் 16ஆம் தேதி (16.06.2025) மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 13 நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதற்கிடையே இந்த போராட்டம் தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

Advertisment

இந்த வழக்கின் விசாரணையில் அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவதால் தூய்மைப் பணியாளர்களை அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் கைது செய்யும் முனைப்பில் போலீசார் அங்குக் குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் தூய்மைப் பணியாளர்களை போலீசார் கைது செய்யது விடுவித்தனர். இத்தகைய சூழலில் தான் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 21வது அமைச்சரவைக் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி (14.08.2025) நடைபெற்றது. அதில், தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு, அவர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். 

Advertisment

அவர்களது குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி செய்யப்படும். மேலும் தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு, 30 ஆயிரம் வீடுகள் அல்லது குடியிருப்புகள் கட்டித்தரப்படும். தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி, தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம்  செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் தூய்மைப்பணியாளர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளை இலவசமாக உணவு வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தலைமையில் தலைமைச் செயலகத்தில் 14.08.2025 அன்று நடைப்பெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு நிதித்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றான தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்குவது குறித்த அறிவிப்பின் விவரம் பின்வருமாறு: தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை அதிகாலையில் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்திற்கு கொண்டு வந்து அருந்துவதற்கும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளுக்கு தீர்வாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புக்களால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment